ராகுல் டிராவிட் பிறந்தநாள்: பெருஞ்சுவர் என்று சும்மாவா சொன்னார்கள்!

By டி. கார்த்திக்

இந்திய அணியில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் எல்லோரும், அணியின் பயிற்சியாளர்களாக வந்துவிடுவதில்லை. மிகச் சிலர் மட்டுமே அதை வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்கள். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான கபில்தேவ் 1999-ல் பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார். அப்போது இந்திய அணியில் விளையாடிய ராகுல் டிராவிட்தான், கபிலுக்குப் பிறகு பயிற்சியாளர் அவதாரம் எடுத்த இன்னொரு முக்கிய ஜாம்பவான். 150 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய டிராவிட் இந்திய அணியுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறார்.

அணிக்குள் வந்த காலத்திலிருந்தே அணியின் ‘பெருஞ்சுவ’ராக மட்டும் டிராவிட் இருந்தவரல்ல. அணிக்குத் தேவையெனில் எல்லா பரிசோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டவர். இன்று தலைமைப் பயிற்சியாளராக அவதாரத்தை எடுத்ததன் மூலம், அவருடைய தாக்கம் இன்னும் மாறாமல் நீடித்துக்கொண்டிருக்கிறது.

1996 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணி புதிய வடிவத்தைப் பெறத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர் என்ற ஒற்றை சூறாவளியின் பேட்டிங்கைத்தான் பெரும்பாலும் சார்ந்திருந்தது. அதுபோன்ற ஒரு தருணத்தில்தான் அணிக்குள் வந்தார் ராகுல் டிராவிட். 1996-ல் தொடங்கி 2012-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை அணியைக் கட்டிக் காக்கும் பெருஞ்சுவராக உயர்ந்து நின்றார் டிராவிட். மிஸ்டர் நம்பர் 3, ஓப்பனர், விக்கெட் கீப்பர், துணைக் கேப்டன், கேப்டன் என இந்த 16 ஆண்டுகளில் இந்திய அணிக்காக அவர் ஏற்ற எல்லா ரோல்களிலும் சோடை போகாமல் வென்றவர் டிராவிட்.

கேப்டன் பதவியை விடாமல் பிடித்துக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், 2007-ல் கேப்டன் பதவியே வேண்டாம் என்று ஒதுங்கி, அடுத்தத் தலைமுறைக்கு வழிவிட்டவர் டிராவிட். சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் என இரு வடிவங்களிலும் தலா 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் 7 பேர்தான். இவர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர் (டெஸ்ட்டில் 13,288; ஒரு நாள் போட்டியில் 10,889) என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்!

சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் பயணித்தவர்கள் ஓய்வு பெற்றால், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைக்க, சில ஆண்டுகளையாவது எடுத்துக்கொள்வார்கள். ஆனால், கிரிக்கெட்டை டிராவிட் விட்டாலும், கிரிக்கெட் அவரை விடவில்லை. 2013 வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியவர், 2014-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகப் புதிய பயணத்தைத் தொடங்கினார். அவர் ஓய்வு பெறும்போது அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார் டிராவிட். இதன்மூலம் கிரிக்கெட் விளையாடுவதை விட்டவுடனேயே பயிற்சியாளர் ஆகிவிட்டார். இரண்டு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த டிராவிட், 2016-ல் இன்னொரு அவதாரம் எடுத்தார். அது, 19 வயதுக்குட்பட்ட இந்திய இளம் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு.

வருங்கால இந்திய அணியை அடுத்தடுத்து கட்டமைக்க டிராவிட் சரியாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நினைத்தது. அதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டார் டிராவிட். அவருடைய பயிற்சியாளர் பணியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய இளம் அணி 2016 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. தொடர்ந்து டிராவிட்டின் பயிற்சியாளர் பணியில் 2018 உலகக் கோப்பையை இந்திய இளம் அணி வென்று காட்டியது. இந்த இரு உலகக் கோப்பை தொடரிலிருந்துதான் ரிஷப் பன்ட், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், பிரித்வி ஷா, சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களை அடையாளம் கண்டார் டிராவிட். அவர்கள் இந்திய அணியில் தற்போது விளையாடி வருவது, டிராவிட்டின் பயிற்சியாளர் தலைமைத்துவத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இதனையடுத்து, 2019-ல் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக அடுத்த அவதாரத்துக்கு மாறினார் டிராவிட். புதிய இளம் வீரர்களைக் கண்டறியும் பொறுப்பு அது. அந்தப் பொறுப்புக்கு இடையே 2021-ல் இங்கிலாந்தில் இந்திய அணி இருந்த வேளையில், இலங்கைக்கு இன்னொரு அணியை பிசிசிஐ அனுப்பியது. புதிய இளம் வீரர்களைக் கொண்ட அந்த அணியின் பயிற்சியாளராக டிராவிட்டைத்தான் பிசிசிஐ தேர்வு செய்தது. அவரை நம்பித்தான் இலங்கைக்கு இந்திய அணியை பிசிசிஐ அனுப்பியது. அப்போதே, இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் என்பது உறுதியானது. அதன்படி 2021 அக்டோபரில் ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பொறுப்பு நிறைவடைந்ததும், டிராவிட் தமைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 2023 உலகக் கோப்பை வரை அந்தப் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டிக்கிறது. அதன் பிறகு நீட்டிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

1996-ல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டை தொடங்கிய டிராவிட், இன்றோடு 49 வயதை எட்டிய நிலையிலும் இந்திய கிரிக்கெட்டோடு அவருடைய பயணம் மாறாமல் தொடர்கிறது. டிராவிட்டை சும்மாவா அழைக்கிறார்கள், இந்திய கிரிக்கெட் அணியைத் தாங்கி நிற்கும் ‘பெருஞ்சுவர்’ என்று!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE