மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: மிதாலி ராஜ் தலைமையில் அணி அறிவிப்பு

By காமதேனு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர், மார்ச்.4 அன்று தொடங்கி நடைபெற உள்ளது. நியூசிலாந்தில் தொடங்க உள்ள இந்த போட்டிகள் ஏப்.3 அன்று வரை நடைபெற உள்ளன. போட்டித் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டிசம்பரில் வெளியிட்டிருந்தது.

இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ் மற்றும் துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் ஆகியோர் தொடர்கின்றனர். இவர்களுடன் விக்கெட் கீப்பர்களாக ரிச்சா கோஷ் மற்றும் தனியா பாட்டியா உட்பட மொத்தம் 15 பேர் கொண்ட அணியினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்ப்புக்குரிய ஜெமிமா, ஷிகா பாண்டே உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை.

மார்ச்.4 அன்று நியூசிலாந்தின் டவுராங்காவில் முதல் போட்டி தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன. மார்ச்.5 அன்று ஹாமில்டனில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. மார்ச்.6 அன்று மீண்டும் டவுராங்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த உலகக்கோப்பை போட்டித் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்துடன் தனியாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி மோதுகிறது. இவற்றில் ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் அடங்கும். இந்த போட்டிகளிலும் மிதாலி ராஜ் தலைமையிலான அணியே பங்கேற்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE