பெங் ஷூய் பத்திரமாக இருக்கிறார்!

By எஸ்.சுமன்

டென்னிஸில் உலகத் தரவரிசை முன்னணி வீராங்கனையான பெங் ஷூய், பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் உறுதி செய்தார்.

டென்னிஸ் விளையாட்டில் பல உலக சாதனைகள் படைத்தவர் பெங் ஷூய். உலகத்தர வரிசையில் முதல் சீன வீராங்கனையாக முதலிடம் பிடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 35 வயதாகும் பெங் ஷூய், சீனாவின் பிரபல சமூக ஊடகத் தளமான ’வெய்போ’வில், அண்மையில் ஒரு பதிவு இட்டிருந்தார். சீனாவின் முன்னாள் துணை அதிபரான ஸாங் கயோலி 6 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னைத் துன்புறுத்தி பாலியல் கொடுமை செய்துவருவதாக பொதுவெளியில் முறையிட்டிருந்தார்.

பெங் ஷூய்

20 நிமிடங்களில் அந்தப் பதிவை வெய்போ நீக்கியது. ஆனால், அதன் ’ஸ்க்ரீன் ஷாட்’ பதிவுகள் உலகம் முழுக்க உலா வந்தன. ஸாங் கயோலி, பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தவர். அதிகார அடுக்கில் அதிபரின்கீழ் 7-வது இடத்தில், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக இருந்தவர். இதனால் பெங் ஷூய் புகார், உலகை உலுக்கும் #Metoo வரிசையில் சேர்ந்தது. மகளிர் டென்னிஸ் சம்மேளம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை பெங் ஷூய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. ’பெங் ஷூய் எங்கே?’ என்ற விர்ச்சுவல் இயக்கத்தை, பிரபல டென்னிஸ் வீரர்கள் முன்னின்று பரப்பினார்கள்.

இதனால் சீனாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. ’வெளிநாடுகள் விசாரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல’ என சீன அரசு ஊடகம் மழுப்பியது. பின்னர் பெங் ஷூய் இடம்பெற்ற படங்கள், வீடியோக்களை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு அனுப்பியது. அவையெல்லாம் பழைய பிரதிகள் என குரல் எழுந்ததும், பின்வாங்கிய சீனா பின்னர், பெங் ஷூய் பெயரில் இ-மெயில் ஒன்றை வெளியிடப்பட்டது.

ஆனால், ஒலிம்பிக் கமிட்டி தலைவரான தாமஸ் பாச், பெங் ஷூய் உடன் வீடியோ காலில் பேசவேண்டும் என்று தொடர் அழுத்தம் கொடுத்தார். ஏற்கெனவே, கரோனா வைரஸில் தொடங்கி எல்லை பிரச்சினைகள், தைவான் தகராறு, நீரிணை விவகாரம் என சிக்கல்களில் தவித்துவரும் சீனா, பெங் ஷூய் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர தீவிரமானது. அதன்படி ஒலிம்பிக் கமிட்டி தலைவரான தாமஸ் பாச், நேற்று(நவ.21) பெங் ஷூய் உடன் சுமார் அரை மணி நேரத்துக்கு வீடியோ சந்திப்பில் உரையாடினார்.

இந்த வீடியோ சந்திப்பிலும், தொழில்நுட்ப தில்லுமுல்லுகள் முதல், ஆள்மாறாட்டம் வரை சீனா செய்திருக்கக் கூடும் என்று பெங் ஷூய் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினாலும், தாமஸ் பாச் அறிவிப்பின் மூலம் பெங் ஷூய் விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE