சர்வதேச டி20 கனவு அணியில் இந்திய வீரர்களுக்கு இடமில்லை!

By பி.எம்.சுதிர்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பு, அதை வெல்லக்கூடிய ஒரு அணியாக இந்தியா கருதப்பட்டது. ஆனால், கடைசியில் அரை இறுதிக்குக்கூட முன்னேற முடியாமல் இந்தியா வெளியேறியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பே, இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ‘டி20 கனவு அணி’யில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக தோனி, கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி என்று ஐசிசியின் கனவு அணிகள் இந்தியர்களால் நிரம்பி வழிந்துள்ளன. ஆனால் இப்போது, ஒரு இந்திய வீரருக்குக்கூட இடம் இல்லாமல் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாபர் அசாமை கேப்டனாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தக் கனவு அணியில் ஜாஸ் பட்லர், டேவிட் வார்னர், மார்க்ராம், சரித் அசலங்கா, மொயின் அலி, வனிது அசரங்கா, ஹாசில்வுட், ஆடம் சம்பா, டிரெண்ட் போல்ட், நார்ஜே ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரோஹித் சர்மா, கோலி. கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோரில் ஒருவருக்குக்கூட இந்தப் பட்டியலில் இடமில்லை.

இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவைப் போலவே, அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற முடியாமல் போன இலங்கை அணியில் இருந்து அசலங்கா, ஹசரங்கா ஆகியோரும், தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து நார்ஜே, மார்க்ராம் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் அரை இறுதிக்கு தகுதிபெறவில்லை என்ற காரணத்தால், இந்திய வீரர்கள் ஒருவர்கூட தகுதிபெறாதது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த முதல் 10 பேட்ஸ்மேன்கள் வரிசையில் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அப்படி இருக்கும்போது, அவர்கள் இல்லாத ஒரு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எப்படி தேர்ந்தெடுத்தது என்பதுதான், இந்திய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கனவு அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான இயான் பிஷப், “அணியைத் தேர்ந்தெடுப்பதில் தேர்வுக் குழுவினரிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெருவாரியான உறுப்பினர்களின் கருத்துப்படி இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 தொடரில் வீரர்கள் எடுத்த ரன்கள், விக்கெட்கள் அடிப்படையில்தான் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்கிறார்.

‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதைப்போல், இப்போது இந்தியாவின் அடி சறுக்கியுள்ள நேரத்தில் மற்ற அணிகள் அதன்மீது ஆட்டம் போடுகின்றன. விரைவில் இந்தியா மீண்டு எழும். நியூஸிலாந்துக்கு எதிராக நாளை (நவ.17) தொடங்கவுள்ள டி20 தொடரை வென்று, இந்தியா மீண்டு எழும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ரசிகர்களின் அந்த நம்பிக்கையை வீரர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE