முகமது ஷமி மீதான வெறுப்பு பதிவுகளை விரைந்து நீக்க ஃபேஸ்புக் உறுதி

By எஸ்.எஸ்.லெனின்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான வெறுப்பை உமிழும் பதிவுகள் எல்லை மீறியதை அடுத்து, அவையனைத்தையும் நீக்க ஃபேஸ்புக் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது.

ஞாயிறு அன்று துபாயில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இந்தியாவுடனான உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை அதிகளவில் தோல்வியையே ருசித்திருக்கிறது. ஞாயிறு டி20 மோதலிலும் இந்திய வெற்றியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. பாகிஸ்தான் வீரர்களில் பாபர்-ரிஸ்வான் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்தியா தோல்வி அடைந்தது.

ஷமி

இதனையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பொங்கித் தள்ளினார்கள். அதிலும் ஷமி வீசிய 3.5 ஓவர்களில் 43 ரன்கள் பறிபோனதில், அவரும் ரசிகர்களின் அர்ச்சனைக்கு ஆளானார். இந்த ரசிகர்களின் போர்வையில் சில விஷமிகள் ஊடுருவிய பிறகு, வெறுப்பைக் கக்கும் பதிவுகளின் போக்கு மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மட்டுமே குறிவைத்து தாக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு அபாண்டங்களை சுமத்தி தரக்குறைவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பலரையும் முகம் சுளிக்க வைத்த இந்த ஆன்லைன் கும்பல் தாக்குதல் குறித்து முகநூல் நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றன.

ஷமி

இதற்கிடையே ஷமி மீதான ஆன்லைன் தாக்குதல்களுக்கு, டெண்டுல்கள், ஷேவாக் போன்ற விளையாட்டுலகின் சீனியர்களும், ராகுல்காந்தி, ஓவைசி போன்ற அரசியல் தலைவர்களும் பொதுவெளியில் கண்டனம் தெரிவித்தனர். சுதாரித்துக்கொண்ட முகநூல் நிர்வாகம் ஷமியை குறிவைத்த விஷமப் பதிவுகளை நீக்க ஆரம்பித்தது. முகநூல் செய்தித் தொடர்பாளரின் அறிவிப்பில், ’இதுபோன்ற ஆன்லைன் தாக்குதல்களுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை’ என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் ஷமிக்கு எதிரான விஷமப் பதிவுகளை விரைந்து நீக்குவதற்கான அப்டேட் உத்திகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒருவழியாக விஷமிகளின் கும்பல் தாக்குதல்கள் குறைந்தன. ஷமிக்கு தேறுதல் சொல்லும்; விளையாட்டை விளையாட்டாக அணுகும் ரசிகர்கள் மட்டுமே அவரது முகநூல் பக்கத்தில் தென்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE