‘டி20’ கப் நமதே!

By பி.எம்.சுதிர்

டி20 உலகக் கோப்பையின் அறிமுகத் தொடரிலேயே (2007-ம் ஆண்டு) சாம்பியன் பட்டம் வென்ற அணி இந்தியா. அதன்பிறகு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடினாலும், என்ன காரணத்தாலோ உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் 'இந்த முறை கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவோம்' என்ற உறுதியுடன் களம் புகுந்திருக்கிறது இந்திய அணி.

இந்த உறுதியைப் பறைசாற்றும் வகையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளிலும் அநாயாசமாக வென்றுள்ளது இந்தியா. இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக, சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று நம்புவதற்கு, வலுவான 5 காரணங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த 5 காரணங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்:

1. பின்னியெடுக்கும் பேட்டிங் வரிசை

கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் மற்ற நாடுகளெல்லாம் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, மிக வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது இந்தியா. கடந்த இங்கிலாந்து தொடருக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 உலகக் கோப்பையில், தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், இன்று அவரே அந்தச் சிந்தனையை மறுபரிசீலனை செய்யும் அளவுக்கு அசத்திவருகிறார் கே.எல்.ராகுல். ஐபிஎல் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்த விதம், அவரே தொடக்க ஆட்டக்காரராக இருக்கட்டும் என்று கோலியைப் பேச வைத்துள்ளது.

டி20 போட்டிகளில் 111 ஆட்டங்களில் 133 சிக்சர்களைப் பறக்கவிட்ட ரோஹித் சர்மா ஒருபுறம், ஐபிஎல்லில் பவுண்டரிகளை விளாசிய கே.எல்.ராகுல் மறுபுறம் என்று தொடக்க ஜோடி மிரட்ட, அடுத்து விராட் கோலி, இஷான் கிஷன், பந்த், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா என மிகப்பெரிய ஹிட்டர்களைக் கொண்ட வரிசையுடன் உள்ளது இந்தியா. கோலி, ரோஹித், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் திறனை இந்த உலகம் ஏற்கெனவே பார்த்ததுதான். ஆனால், டி20 போட்டிகளில் ஸ்டிரைக் ரேட்டாக (ஒரு பந்துக்கு எடுக்கும் சராசரி ரன்கள்) 169.51 கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ், 145.45 வைத்திருக்கும் இஷான் கிஷனும் இந்த உலகுக்கு இந்தியா இதுவரை காட்டாத அக்னி ஏவுகணைகள். ஜூனியர் தோனியாக வர்ணிக்கப்படும் ரிஷப் பந்த்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களில் ஓரிருவர் சரியாக பேட்டிங் செய்யாவிட்டாலும் மற்றவர்கள் உறுதியாக அணியைக் கரைசேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

2. சூப்பரான சுழற்பந்து வீச்சு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, அது சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானங்களைக் கொண்டுள்ளது. எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் அவர்களின் கழுத்தை நெறித்து, பின்னர் விக்கெட்டுகளைக் கொய்வது சுழற்பந்து வீச்சாளர்களின் ஸ்டைல். அந்த வகையில் எதிரணியைத் திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்தவர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர் போன்ற மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டுள்ளது.

இதில் அஸ்வினும், ஜடேஜாவும் பழங்காலத்து நரிகள் என்றால், மற்ற இருவரும் புதுப் புலிகளாக எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தக் காத்திருக்கிறார்கள். சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் எதிரணியினருக்குச் சவால் விடும் வகையில் இந்த கூட்டணியின் பந்துவீச்சு அமைந்தது. அதே திறனுடன் இவர்கள் தொடர்ந்து விளையாடினால், எதிரணி பேட்ஸ்மேன்கள் இவர்களிடம் ரன்களைக் குவிப்பது சிரமமமான விஷயமாக இருக்கும்.

3. வெளுத்துவாங்கும் வேகப்பந்து வீச்சு

ஒரு காலத்தில், மற்ற அணிகளில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கலங்கி நின்றிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளில் ஏராளமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்களே, அவர்களில் யாராவது ஒருவர் இந்தியாவுக்கு ஆட மாட்டாரா என்று ஏங்கி நின்றிருக்கிறார்கள். ஆனால், அந்த ஏக்கத்தை எல்லாம் தீர்க்கும் வகையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் என்று 3 அதி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்காகச் சீறிப் பாய தயாராக இருக்கிறார்கள். 'பவர் ப்ளே' எனச் சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில், இவர்களிடம் ரன் குவிப்பது சிரமம். அப்படியே முதல் 6 ஓவர்களில் ரன் எடுத்தாலும், கடைசி ஓவர்களில் மீண்டும் வந்து எதிரணியின் கழுத்தைப் பிடிப்பது இந்த வேகப்பந்து கூட்டணிக்குக் கைவந்த கலையாக உள்ளது. இந்தக் கலை, உலகக் கோப்பையில் கோலிக்குக் கைகொடுக்கும்.

4. சீனியர் ஜூனியர் சிங்கங்கள்

இந்திய அணியின் மற்றொரு பிளஸ் பாயின்ட் என்று, இந்த அணியில் இளமையும் அனுபவமும் சரி விகிதத்தில் கலந்திருப்பதைக் கூறலாம். விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா என்று சர்வதேச கிரிக்கெட்டில் ஓரளவு அனுபவம் பெற்ற வீரர்கள் ஒரு பக்கம் நங்கூரமிட்டு நிற்க, பந்த், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், பும்ரா என்று இளம் வீரர்கள் எதிரணி மீது பாயத் தயாராக இருக்கிறார்கள். இப்படி இளமையும் முதுமையும் சரிவீதமாகக் கலந்து இருப்பது அணிக்கு மற்றொரு பிளஸ் பாயின்ட்.

5. துணைவராக வரும் தோனி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிப்பதற்காகக் கடந்த மாதம் கூடிய தேர்வுக்குழு, திடீரென்று ஒரு பவுன்சரை வீசியது. இந்திய அணியின் பயிற்சியாளராக ஏற்கெனவே ரவி சாஸ்திரி உள்ள நிலையில், அணியின் வழிகாட்டியாக (mentor) தோனியை நியமித்ததே அந்த பவுன்சர் முடிவு. டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஷிப் கோப்பை, ஆசிய கோப்பை, 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 4 ஐபிஎல் கோப்பைகள் என தனது அலமாரி முழுக்க வெற்றிக் கோப்பைகளாக அடுக்கி வைத்திருப்பவர் தோனி. எனவே, அவரது வழிகாட்டுதல், இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பையில் சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நம்பப்படுகிறது.

வீரர்களை அடிக்கடி மாற்றுவது, எளிதில் பதற்றப்படுவது எனக் கேப்டனாக கோலியின் செயல்பாடுகளில் பல தவறுகள் உள்ளன. இந்த விஷயங்களில் கோலிக்கு நேர் எதிரானவராக தோனி இருக்கிறார். எந்த கட்டத்திலும் பதற்றப்படாமல் இருக்கும் அவர், வீரர்களையும் அடிக்கடி மாற்றுவதில்லை. எனவே, இதுபோன்ற விஷயங்களில் கோலிக்கு அவர் உதவக்கூடும்.

இப்படி சாதகமாகப் பல அம்சங்கள் இருப்பதால், இம்முறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். கோப்பையுடன் கேப்டன் கோலி விடைபெறுவார் என்று நம்புவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE