விலகலும் ‘தலை’ காக்கும்... தோனி பாதையில் கோலி!

By டி. கார்த்திக்

இந்திய கிரிக்கெட் கேப்டன்களில் பல வகையினர் உண்டு. ‘கேப்டன் பதவியே வேண்டாம்’ என்று தலைதெறிக்க ஓடியவர்கள் இருந்திருக்கிறார்கள். ‘கேப்டன் பதவியை விடுவேனா’ என்று, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் துரத்தும் வரைக்கும் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வீரர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது கேப்டன் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதில், ராஜதந்திரத்தைப் பின்பற்றுகிறாரோ என்கிற கேள்விக்கு வித்திட்டிருக்கிறார் விராட் கோலி. அதற்கு விதையைப் போட்டவராகியிருக்கிறார் எம்.எஸ்.தோனி.

அதிரடி அறிவிப்பு

2007 முதல் 2017 வரை வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. டி-20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் வென்றெடுத்த ஒரே கேப்டன். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன். ஒரு நாள், டி-20 தொடர்களில் கில்லியாக இருந்த தோனிக்கு, டெஸ்ட் போட்டிகள் குடைச்சலானவை. அதுவும், வெளிநாட்டு (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) டெஸ்ட் தொடர்கள் சிம்மசொப்பனம்.

2011-ல் உள்நாட்டில் உலகக் கோப்பையை வென்றெடுத்த கேப்டன் தோனிக்கு, அதே ஆண்டில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள். இங்கிலாந்தில் 0-4 என்கிற கணக்கிலும், ஆஸ்திரேலியாவில் 0-4 என்கிற கணக்கிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து 2014-ம் ஆண்டிலும் இதே கதைதான். இங்கிலாந்தில் 1-3 என்கிற கணக்கில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அதே ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில், 0-1 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்துக்கொண்டிருந்தபோது, டெஸ்ட் கேப்டன் பதவியை மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் இருந்தே விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் தோனி. அந்த டெஸ்ட் தொடரை 0-2 என்கிற கணக்கில் இந்தியா இழந்தது.

அன்று தோனி, இன்று கோலி!

ஆனால், தோனி முன்கூட்டியே டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டு விலகியதால், அவருக்கு அனுகூலம் கிடைத்தது. உண்மையில் அந்த முடிவை தோனி எடுக்காமல் போயிருந்தால், 2015 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு முழுவதுமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். ஆனால், சாதுரியமாக டெஸ்ட் போட்டியிலிருந்தே ஓய்வு பெற்றதால், ஒரு நாள், டி-20 கேப்டனாக மேலும் 2 ஆண்டுகளுக்கு அவரால் நீடிக்க முடிந்தது.

இப்போது கோலிக்கு வருவோம். தோனியைப் போல அல்லாமல், டெஸ்ட் போட்டிகள் எல்லாம் கோலிக்கு அல்வா போல. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்திருக்கிறார். ஆனால், அவருக்குச் சறுக்கலே ஐசிசி தொடர்கள்தாம். 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றிலுமே அரையிறுதி அல்லது இறுதிவரைச் சென்றும் அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டனாக இருந்தும் ஒருமுறைகூட, அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை அவரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. (ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெறும் ஐபிஎல் போட்டியோடு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அங்கும் கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து காத்திருக்கிறது!)

அடுத்த மாதம் டி-20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கழித்து நடைபெறும் உலகக் கோப்பை இது. டி-20 உலகக் கோப்பைக்கு முதன்முறையாகக் கேப்டனாகியிருக்கிறார் கோலி. ஒருவேளை அந்தத் தொடரில் இந்தியா வெல்ல முடியாமல் போனால், கோலியின் கேப்டன் பதவி ஆட்டம் கண்டுவிடும்.

வென்றாலும் தோற்றாலும்...

இதோ, அடுத்த மாதம் டி-20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கழித்து நடைபெறும் உலகக் கோப்பை இது. டி-20 உலகக் கோப்பைக்கு முதன்முறையாகக் கேப்டனாகியிருக்கிறார் கோலி. ஒருவேளை அந்தத் தொடரில் இந்தியா வெல்ல முடியாமல் போனால், கோலியின் கேப்டன் பதவி ஆட்டம் கண்டுவிடும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே நடவடிக்கை எடுத்தால், டெஸ்ட் போட்டியைத் தவிர்த்து ஒரு நாள், டி-20 போட்டி கேப்டன் பதவியிலிருந்து நீக்கும் முடிவையும் எடுக்கலாம்.

ஆனால், இப்போதோ டி?20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக கோலி அறிவித்துவிட்டார். ஒருவேளை கோப்பையை வென்றாலும், உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமையோடு பதவியை உதறிவிடலாம். அப்படி இல்லையெனில், கேப்டன் பதவியை முன்பே உதறிவிட்டதால், விமர்சனங்கள் இன்றி தப்பிக்கலாம். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளுக்கு மீண்டும் கேப்டனாகத் தொடரலாம். அன்று தோனி போட்ட அதே பாதையில், இன்று கோலியும் பயணிக்கிறார் என்றே சொல்லலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE