பி.எம்.சுதிர்
கிரிக்கெட் மைதானத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் டென் தவுசண்ட்வாலா வெடித்து தீபாவளிப் பண்டிகையை வரவேற்றிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்து அவர் படைத்துள்ள சாதனை ஒவ்வொரு இந்தியரையும் கர்வம் கொள்ள வைக்கிறது.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சச்சின், கங்குலி, திராவிட், தோனி ஆகிய நால்வரும் ஏற்கெனவே 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ள போதிலும் கோலியின் சாதனை ரசிகர்களுக்கு அதிகம் ருசிக்கக் காரணம் அவரது வேகம். 213 போட்டிகளில் வெறும் 205 இன்னிங்ஸ்கள் மட்டுமே பேட்டிங் செய்து இந்தச் சாதனையை எட்டியுள்ளார் கோலி. கிரிக்கெட் கடவுள் என்று எல்லோராலும் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரே 259 இன்னிங்ஸ்களில்தான் (266 போட்டிகளில்) 10 ஆயிரம் ரன்களைத் தொட்டார். இந்நிலையில் சச்சினைவிட 54 இன்னிங்ஸ்கள் குறைவாக ஆடி 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார் விராட் கோலி. இதில், 9 ஆயிரம் ரன்களில் இருந்து 10 ஆயிரம் ரன்களை எட்ட அவருக்கு வெறும் 11 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவுக்கு வேகமாக கோலி ரன்களைக் குவிப்பதற்கு முதல் காரணம் அவரது மன உறுதி. இதற்கு உதாரணமாக 2006-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.