பி.எம்.சுதிர்
விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை தமிழகத்துக்கு இது பொற்காலம். கடந்த ஆண்டு நடந்தஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 'சென்னையின் எஃப்சி' அணி கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை முத்தமிட்டது. அந்த வரிசையில் இப்போது புரோ கபடி லீக் போட்டிகள் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியிருக்கிறது. கால்பந்து, கிரிக்கெட் வரிசையில் இந்தத் தொடரில் தமிழகத்தின், ‘தமிழ் தலைவாஸ்’ அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு கபடி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
புரோ கபடி லீக் போட்டிகளைப் பொறுத்தவரை முதல் 4 சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்த அணிகள் எதுவும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த 5-வது சீசனில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி உருவாக்கப்பட்டு களம் இறக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனான அஜய் தாக்குரின் தலைமையில் களம் இறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, இத்தொடரில் பி பிரிவில் கடைசி இடத்தையே பிடித்தது. போதிய அனுபவமின்மையால் இந்தத் தொடரில் தோற்றதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு புதிய வீரர்களுடனும் புதிய பயிற்சியாளருடனும் களம் இறங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி எப்படியோ, அப்படித்தான் தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் அஜய் தாக்குர். இந்திய கபடி அணியின் கேப்டனான அஜய் தாக்குர், 2016-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரானுக்கு எதிராக தனிநபராக 12 புள்ளிகளைப் பெற்று இந்தியாவுக்குக் கோப்பையை வாங்கித் தந்தவர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 76.23 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அஜய் தாக்குரை இந்த ஆண்டு மீண்டும் தக்கவைத்துள்ளது தமிழ் தலைவாஸ். புரோ கபடி லீக்கில் ரெய்ட் மூலம் இதுவரை 213 புள்ளிகளைப் பெற்றுள்ள அஜய் தாக்குர், கடந்த ஆண்டு 3 ஆட்டங்களில் இவர் தனது கடைசி ரெய்ட் மூலம் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.