சென்னை: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 5-வது மாநில அளவிலான இளையோர் தடகள சாம்பியன்ஷிப் நாளை (18-ம் தேதி) முதல் இரு நாட்கள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் 18, 20 மற்றும் 23 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
இந்த தொடரில் ஆடவர் பிரிவில் 59 போட்டிகளும், மகளிர் பிரிவில் 57 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் பரிசளிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் இருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்த அணி ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெறும் 19-வது தேசிய இளையோர் தடகள சாம்பயின்ஷிப்பில் கலந்து கொள்ளும். இத்தகவலை தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.