ஆசிய விளையாட்டுப் போட்டி. குண்டு எறியும் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக குண்டுகளை எறிந்துகொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய வீரரான தஜிந்தர் பால் சிங் டூருக்கு மட்டும் மனம் இருப்புக் கொள்ளவில்லை. காரணம், அந்தச் சமயத்தில் எலும்பு புற்றுநோய் முற்றிய நிலையில் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அவரது அப்பா கரம் சிங் டூர். சொந்த மண்ணை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், தஜிந்தரின் மனது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அப்பாவையே வட்டமடித்தது. இதனாலோ என்னவோ முதல் 4 முறை அவரால் சரியாக குண்டை எறிய முடியவில்லை.
சோகத்துடன் பார்வையாளர்கள் வரிசையைப் பார்க்கிறார் தஜிந்தர். அங்கிருந்த அவரது பயிற்சியாளர் தில்லான், கண்களில் கோபம் தெறிக்க தஜிந்தரைப் பார்க்கிறார். “இதற்காக நீ வெட்கப்பட்டு சாகவேண்டும்” என்று அவர் ஆவேசத்தில் கத்த, தஜிந்தருக்குள் வெறி ஏற்படுகிறது. அதே வெறியுடன் அவர் வீசிய குண்டு 20.75 மீட்டர் தூரத்துக்கு பறந்துபோய் விழுந்து அவருக்குத் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருகிறது!
பதக்கம் கழுத்தில் விழுந்ததும், “இது என் தந்தைக்காக வாங்கிய தங்கம். சீக்கிரமே இந்தியாவுக்குச் சென்று இந்தப் பதக்கத்தை தந்தையிடம் காட்ட வேண்டும். அவர் வாழும் காலத்துக்குள் மேலும் பல பதக்கங்களை வென்று அவரை மகிழ்விக்க வேண்டும்” என்று கூறினார் தஜிந்தர் பால் சிங் டூர். இது வெறும் வார்த்தைகள் அல்ல. தந்தை மீது அவர் வைத்துள்ள உண்மையான பாசத்தின் வெளிப்பாடு. மகன் ஒரு விளையாட்டு வீரராக உருவெடுக்க, கரம் சிங் டூர் செய்த தியாகங்களும் அதிகம்.
1980-களில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோசா பாண்டோ கிராமத்தில் கரம் சிங் டூர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரர். ‘ஹீரோ’ என்று ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், கயிறு இழுக்கும் போட்டியில் மாநில அளவில் பல பதக்கங்களை வென்றவர். குடும்பச் சூழலால் ஒரு கட்டத்துக்கு மேல் இவரால் விளையாட்டில் ஈடுபட முடியாமல் போனது. குடும்பத்தைக் காப்பாற்ற விவசாயத்தில் இறங்கினார். எனினும் விளையாட்டில் தன்னால் சாதிக்க முடியாததை தனது மகன் தஜிந்தர் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார்.