உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகின்றன. இந்நிலையில் இந்தத் தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படும் 5 அணிகளைப் பற்றிய ஒரு பருந்துப் பார்வை:
பிரேசில்: கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் என்று பிரேசிலைச் சொல்லலாம். இதுவரை 5 முறை கோப்பையை வென்ற பிரேசில், 6-வது முறையாக மகுடம் சூடும் கனவுடன் களம் இறங்குகிறது. அந்த அணியின் தாக்குதல் வியூகங்கள் பெரும்பாலும் நட்சத்திர வீரரான நெய்மரைச் சுற்றியே இருக்கிறது. ஆனால் நெய்மரோ, கடைசி நேரத்தில் காயங்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறார். என்றாலும், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பரபரவென அடுத்த கட்ட திட்டங்களைத் தீட்டி வருகிறார் பிரேசிலின் பயிற்சியாளர் டைட். சதுரங்கத்தில் பலம் பொருந்திய ராணியை இழந்துவிட்டால், அடுத்த கட்டமாக யானை, மந்திரி, குதிரை என்று அடுத்தடுத்து பவர் காயின்களை நகர்த்துவதைப் போல பிலிப் கோட்டின்ஹோ, வில்லியன் என்று அடுத்த கட்ட வீரர்களை வைத்து தாக்குதல் வியூகம் வகுத்து வருகிறார் டைட்.
அர்ஜென்டினா: கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா எப்படியோ, அப்படித்தான் கால்பந்தில் அர்ஜென்டினா. ஒவ்வொரு தொடரிலும் இந்த அணிதான் பெரிதாகப் பேசப்படும். லீக் ஆட்டங்களிலும் தூள் பறத்தும். ஆனால், இறுதிப் போட்டியில் ஜகா வாங்கிவிடும். 2014-ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து, 2016-ல் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து, என இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்தத் தொடர்களில் எல்லாம் இறுதிப் போட்டி வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையைத் தவற விட்டது அர்ஜென்டினா.
அந்தத் தவறு இந்த முறையும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகிறார்கள் அர்ஜென்டினா வீரர்கள். மேலும் தங்கள் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு, இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்பதால், ஒரு சாம்பியனாக அவரை வழியனுப்ப வேண்டும் என்ற வேட்கை ஒவ்வொரு வீரருக்கும் இருக்கிறது. மெஸ்ஸிக்குத் தோள்கொடுக்கும் வகையில் செர்ஜியோ ஆகுரோ, கொன்சாலோ ஹிகுயின் போன்ற நட்சத்திர வீரர்களும் மைதானத்தில் கலக்கும் பட்சத்தில், ரஷ்யாவில் அர்ஜென்டினா புதிய சரித்திரம் படைக்கலாம்.