சர்வதேச கால்பந்து தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கிறது எகிப்து அணி. ஆனாலும், இந்த உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி போன்ற பகாசுர அணிகளெல்லாம் எகிப்தைப் பார்த்து பயப்படுகின்றன. கொஞ்சம் அசந்தாலும் எகிப்தால் தங்களை வீழ்த்திவிட முடியும் என்று மிரள்கின்றன. இப்படி ஒரு கருப்புக் குதிரையாய் எகிப்து அணியை எல்லோரும் பார்க்கக் காரணம் முகமது சாலா!
பொதுவாக ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள்தான் கால்பந்து உலகில் ஸ்டாராக ஜொலிப்பார்கள். முதல் முறையாக இந்த கண்டங்களுக்கு வெளியில் இருந்து உலகம் போற்றும் கால்பந்து வீரராக உருவாகி இருக்கிறார் முகமது சாலா. தொழில் முறைப் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக தற்போது ஆடிவரும் முகமது சாலா, பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் 44 கோல்களை அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். ‘எகிப்தின் ராஜா’ (king of egypt) என்று உலகக் கால்பந்து ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சாலா, கடுமையான போராட்டத் துக்கு பின்பே இந்த உச்சத்தைத் தொட்டுள்ளார்.
எகிப்தின் கர்பியா என்ற கிராமம்தான் சாலாவின் சொந்த ஊர். 1992-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது தனி பிரியம். விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே ரொனால்டோ, சிடேன் போன்ற வீரர்களின் ஆளுமையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், இவரது கவனம் முழுக்கக் கால்பந்தில்தான் இருந்தது. சாலாவின் பெற்றோருக்கு அவரை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரோ, கால்பந்தைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்ப தில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றோரும் சாலாவை, அவரது வழியில் விட்டுவிட முடிவெடுத்தனர்.
கால்பந்தில் ஆர்வம் இருந்தும் சிறுவயதில் சாலாவுக்கு அதைக் கற்றுக்கொடுக்க சரியான ஆசான் இல்லை. இந்தச் சூழலில், தொலைக்காட்சி யில் ஒளிபரப்பான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளே சாலாவுக்கு வகுப்பறையானது. சிடேன், ரொனால்டோ, டோட்டி ஆகியோரின் ஆட்ட நுணுக்கங்களைப் பார்த்து மைதானத்தில் அதேபோன்று பந்தை உதைத்து கால்பந்தின் அரிச் சுவடியைக் கற்றார் சாலா.