பனிச்சறுக்கில் புலிப் பாய்ச்சல்... 12 வயதில் சர்வதேச போட்டிக்குச்  செல்லும் பிரணாப்!

By காமதேனு

சென்னை மெரினாவிலும் கோவை வ.உ.சி. பூங்காவிலும் ‘ஸ்கேட்டிங்’ பிரபலம். சிறுவர்கள் உடலை வளைத்து வளைத்து மின்னல் வேகத்தில் கடந்து செல்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். கோவை சின்னத்தடாகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரணாப், தரை ஸ்கேட்டிங்கைத் தாண்டி சர்வதேச அளவிலான பனிச்சறுக்கு ஸ்கேட்டிங் போட்டிக்குச் செல்லவிருக்கிறான். தமிழகத்திலிருந்து சர்வதேச பனிச்சறுக்கு ஸ்கேட்டிங் போட்டிக்குச் செல்லும் முதல் சிறுவன் பிரணாப் என்பதுதான் சிறப்பு!

கோவையில் மற்ற சிறுவர்களைப் போலத்தான் பிரணாப்பும் தனது ஆறு வயதில் ஸ்கேட்டிங் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தான். இரு ஆண்டுகள்... ஏராளமான போட்டிகள், மாவட்ட அளவில், மாநில அளவில் மெடல்களை அள்ளினான். பிரணாப்புக்கு இதில் கிடைத்த ‘த்ரில்’ போதவில்லை. தரையில் ஸ்கேட்டிங் செய்வதைத் தாண்டி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, அவனது பயிற்சியாளர் அளித்த யோசனைதான் பனிச்சறுக்குப் போட்டி!

அதுவரை தரையில் செல்வதற்கான (ரோலர் ஸ்கேட்டிங்) சக்கரங்கள் கொண்ட ஷூவை அணிந்துகொண்டு விளையாடியவன், பிளேடுகள் பொருத்தப்பட்ட ஷூக்களைக் கால்களில் மாட்டினான். ஆனால், கோவையின் தரையில் இதை ஓட்ட முடியுமா... ஸ்ரீநகர், சிம்லா, ஹரியானா, டெல்லி என்று பிரணாப்பை அழைத்துச் சென்றார் அவரது தந்தை அருண்பிரசாத். இப்படியான பயணம்தான் பிரணாப்பை,  ஜூலை மாதம் பெலாரஸில் (போலந்து அருகே உள்ள நாடு) நடைபெற இருக்கும் சர்வதேச அளவிலான பனிச்சறுக்குப் போட்டியில் கலந்துகொள்வதில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

பிரணாப்பின் தந்தையிடம் பேசினேன். “ஐஸ் ஸ்கேட்டிங் அவ்வளவு சுலபம் இல்லை. ரொம்பவும் அபாயகரமானது. ஒன்றரை அடி நீள ஸ்டீல் பிளேடு கொண்டு ஷூ அது. அதை மாட்டிகிட்டு ஐஸ் பாதையைக் கிழிச்சுட்டுப் போகணும். விழுந்துட்டா கத்திகள் உடலைப் பதம் பார்த்துடும். அதே சமயம் பின்னால் வர்றவங்க கால்ல இருக்கிற ஷூ பிளேடு நம்ம கை, காலை துண்டாக்கிடும். உடலை முழுசா மூடிய பாதுகாப்பான உடையும் தலையில் ஹெல்மெட் போட்டாலும்கூட ரொம்ப ஜாக்கிரதையா விளையாடணும். இதுல ‘ஷார்ட் டிராக்’ (111.5 மீட்டர்), ‘லாங் டிராக்’ (400 மீட்டர்) ரெண்டு பிரிவு இருக்கு. பிரணாப் செய்யறது ஷார்ட் டிராக் பயிற்சி. நகர் குல்மார்க், காஷ்மீர்- சிம்லா, ஹரியானா குர்கான் அங்கெல்லாம் டிசம்பர்- ஜனவரியில ரோடெல்லாம்  பனிக்கட்டிகளா மாறியிருக்கும். அப்பதான் அங்கே ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி ஓடுதளம் ஸ்கேட்டிங்கிற்கு ஏற்றதா இருக்கும். இதுவே ‘லாங் டிராக்’ பயிற்சி எடுக்கணும்னா சீனா, போலந்து, யூரோப்னு போகணும்!” என்கிறார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE