’சக்டா எக்ஸ்பிரஸ்’ - சாதித்துக்காட்டிய ஜுலன் கோஸ்வாமி!

By காமதேனு

சிறுவயதில் தபால் தலைகளைச் சேகரிப்பதென்றால், ஜுலன் கோஸ்வாமிக்கு மிகவும் பிடிக்கும். ஆதிகாலத்து உள்நாட்டு, வெளிநாட்டுத் தபால் தலைகளைத் தேடிப்பிடித்து ஒரு புத்தகத்தில் ஒட்டிவைப்பார். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் அவற்றை எல்லாம் ஆர்வமாய் எடுத்துக் காட்டுவார். அப்படிப்பட்டவருக்கு இப்போது இந்திய அரசே தபால் தலையை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் கிரிக்கெட். பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி இதுவரை எந்தச் சர்வதேச வீராங்கனையும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளார் ஜுலன் கோஸ்வாமி.

கொல்கத்தாவில் இருந்து 58 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சக்டாதான் (Chakdah) ஜுலன் கோஸ்வாமியின் சொந்த ஊர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு டிவி மூலமாகத்தான் கிரிக்கெட் அறிமுகமானது. “அப்போதெல்லாம், விளையாட்

டுன்னா கால்பந்து, கிரிக்கெட்டைத்தான் தூர்தர்சனில் அதிகம் ஒளிபரப்புவார்கள். எங்கள் வீட்டில் அக்கம்பக்கத்தினர் எல்லாம் பெரும் கூட்டமாகச் சேர்ந்துகொண்டு அந்த ஆட்டங்களைப் பார்ப்பார்கள். கபில்தேவ் விக்கெட் வீழ்த்தினால் வீடே அதிரும். முதலில் எனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், கபில்தேவ் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. கபில்தேவைப் போல் பந்து வீசுவதாக நினைத்துக்கொண்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று ஓடிப் பந்தை எறிவேன். வீட்டில் உள்ளவர்கள் சிரிப்பார்கள். அப்படித்தான் சின்ன வயதிலேயே கபில்தேவ் மூலம் கிரிக்கெட் ஆசை என் மனதுக்குள் சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டது” என்கிறார் ஜுலன்.

ஜுலன் மனதில் கபில்தேவ் போட்ட கிரிக்கெட் விதை... 1987-ல், நடந்த பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டியின்போது முளைவிட்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில், ‘ பால் கேர்ள்’களாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பந்தைப் பொறுக்கிப் போடும் வாய்ப்பு ஜுலனுக்கும் கிடைத்தது. சும்மாவே ஆடும் கால்களுக்கு சலங்கையை வேறு கட்டிவிட்டால் கேட்க வேண்டுமா என்ன? ஜுலன் மனதில் கிரிக்கெட் ஆசை கற்பூரமாய் பற்றிக்கொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE