கஷ்டப்பட்டு பவுண்டரிகளும் சிக்சர்களும் அடித்துப் புகழ்பெறும் வீரர்களுக்கு மத்தியில், ரசிகராக இருந்தே கிரிக்கெட்டில் புகழ் பெற்றிருக்கிறார் சரவணன். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘யெல்லோ மேன்’ சரவணன்!
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் போட்டி எங்கு நடந்தாலும், அங்கெல்லாம் உடலில் மஞ்சள் நிற பெயின்ட்டை பூசிக்கொண்டு தோனியின் பெயரையும் சிஎஸ்கேவின் பெயரையும் பொறித்துக்கொண்டு சரவணன் இருப்பார். மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் சிக்சர்களைப் பறக்கவிடும்போதெல்லாம், இவர் போடும் உற்சாகக் கூத்தைக் காட்ட கேமராக்கள் திரும்பும். எப்படி வந்தது இந்த கிரிக்கெட் ஆர்வம் என்று சரவணனைக் கேட்டோம்.
“நான் சென்னைக்காரன். புறநகர் பகுதியான எர்ணாவூரில் இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் உயிர். டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு போட்டியையும் தவறாமல் பார்த்துவிடுவேன். தொடக்கத்தில் சச்சின் தெண்டுல்கரின் ரசிகரா இருந்தேன்.
ஆனால், தோனி கிரிக்கெட் ஆட வந்த பிறகு அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் டி20 உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் இந்திய அணி பெற்ற பிறகு அந்த ஈர்ப்பு அதிகமானது. அந்தச் சமயத்தில்தான் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமானது. நான் சென்னைக்காரன் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டதைக் கொண்டாட்டத்துடன் வரவேற்றேன். நான் விரும்பும் வீரரன தோனி, இந்த அணிக்கு கேப்டன் ஆனதும் என் அர்வம் அதிகரித்தது.