பழநி முருகன் மாநாட்டில் பங்கேற்போர் பதிவு செய்ய இணையதளம்: இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம்

By KU BUREAU

சென்னை: பழநியில் ஆகஸ்டில் நடைபெற உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்துகொள்ளவும், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் பிரத்யேக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, வரும் ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பர பணிகள், ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், முக்கிய பிரமுகர்களை வரவேற்று வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல,அறுபடை வீடுகளின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சி கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகனின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த மாநாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என உலகம் முழுவதும் இருந்து சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 15-ம் தேதிக்குள்.. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும், முருகனை கருப்பொருளாக கொண்ட ஆய்வு கட்டுரைகளை ஜூன் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனை குழு உறுப்பினர்களான கவுமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம்  சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE