மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் விமரிசையாக நடந்த விஷு கனி தரிசனம்

By KU BUREAU

மலையாள புத்தாண்டை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசன வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு புதிய நாணயங்களை மேல்சாந்தி, தந்திரி ஆகியோர் வழங்கினர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 2-ம் தேதி கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உச்ச நிகழ்வாக, கடந்த 10-ம் தேதி இரவு சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 11-ம் தேதி காலை ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விழா நிறைவடைந்து கொடி இறக்கப்பட்டது.

பின்னர், மலையாள புத்தாண்டான விஷு பண்டிகைக்கான வழிபாடு தொடங்கியது. புத்தாண்டு பிறக்கும் நாளில் ஐயப்பன் சந்நிதியில் பழங்கள், தானியங்களை வைத்து ‘விஷு கனி’ தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக நேற்று முன்தினம் பெரிய பாத்திரத்தில் மா, வெள்ளரி, தேங்காய், உலர்ந்த அரிசி, நெல், பலா உள்ளிட்ட பழங்கள், கண்ணாடி, காய்கறிகள் உள்ளிட்டவை படைக்கப்பட்டன. பெரிய வெள்ளி கிண்ணத்தில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 புதிய நாணயங்கள் நிரப்பப்பட்டு சுவாமி ஐயப்பன் முன்பு வைக்கப்பட்டன. அன்று இரவு ஹரிவராசனம் பாடலுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, விஷு கனி தரிசனம் செய்தனர். ஐயப்பனின் பிரசாதமாக புதிய நாணயங்கள், கனிகளை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, தந்திரி கண்டரரு ராஜீவரு ஆகியோர் பக்தர்களுக்கு வழங்கினர். இது ‘கைநீட்டம்’ எனப்படும்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது, ‘‘புத்தாண்டில் முதன்முதலாக, மங்கலகரமான காட்சியான விஷூ கனியை தரிசிப்பதால், ஆண்டு முழுவதும் சிறப்பான, மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். அதேபோல ஐயப்பன் முன்பு படைக்கப்பட்ட புதிய நாணயங்களை பெறுவதால், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டு நாளில் ஐயப்பனை தரிசித்ததை பாக்கியமாக கருதுகிறோம்’’ என்றனர்.

வழக்கமான வழிபாடுகளுடன் பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கடந்த 1-ம் தேதி மாலை திறக்கப்பட்டு வரும் 18-ம் தேதி வரை தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE