மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறுவதால் ஏப். 7 முதல் ஜூலை 14-ம் தேதி வரை கோயில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்ய பிரியா, துணை ஆணையர் எம்.சூரிய நாராயணன் ஆகியோர் தெரிவித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 14-ல் நடைபெறும் என சட்டப் பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனையொட்டி பிப். 10-ல் பாலாலயத்துடன் ராஜகோபுர திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும் கோயில் மூலஸ்தானத்திலுள்ள தாய்ப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள மூல விக்கிர கங்களுக்கு, கடுசக்கரை சாத்தும் பணி, மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மராமத்து, பணிகளுக்காக ஏப்.9ல் மூலாலய பாலாஸ்தாபனம் நடைபெற உள்ளது.
மூலஸ்தான பாலாலயத்தை முன்னிட்டு ஏப்.7ம் தேதி மாலை 6 மணி முதல் பாலாலய யாகசாலை பூஜை தொடங்குவது முதல் ஜூலை 14ம் தேதி வரை கும்பாபிஷேக பணிகள் முடியும் வரை கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் சண்முகர் சன்னதியில் உள்ள மூலஸ்தானத்தில் வழிபாடு செய்யலாம். இவ்வாறு தெரிவித்தனர்.