கோவை: மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ‘லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் போலீஸார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளு க்கு பிறகு, நாளை (ஏப்.4) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 1ம் தேதி முதல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 73 யாக குண்டங்களில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள், சுவாமிக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள், திருவீதி உலாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேத்தன்று கோயில் வளாகத்தில் உள்ள சந்நிதிகளின் மண்டபங்கள் மீது 750 பேரும், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் 1,500 பேரும் கும்பாபிஷேகத்தை நேரில் காண அனுமதிக்கப்பட உள்ளனர்.
கும்பாபிஷேக தினம் மற்றும் அதற்கடுத்த சில நாட்களில் மொத்தம் 2 லட்சம் பக்தர்கள் வருவர் என கோயில் நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர். எனவே, படிக்கட்டுப் பாதைகளில் பசுமைப் பந்தல் ஏற்படுத்துதல், உணவு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ராஜகோபுரத்தின் மீது 8 அடி உயரம், 6 அடி அகலத்தில் ‘ஓம்’ என்ற எழுத்தும், அதன் மீது 24 அடி உயரம், 8 அடி அகலத்தில் ‘வேல்’ வடிவ எல்.இ.டி விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் காண கோயில் வளாகம், அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள் வைக்கப்பட உள்ளன.
போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு: மாநகர காவல்துறையினர் கூறும்போது, ”மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் தலைமையில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சிறப்புக் காவல் படை போலீஸார், ஊர்க்காவல் படையினர் என 1000-ம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்” என்றனர்.
நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம்: கோவை மாநகர காவல்துறை நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்று (ஏப். 3) மதியம் 2 மணி முதல் வரும் 6-ம் தேதி இரவு 9 மணி வரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, மருதமலை கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், வடவள்ளி, தொண்டாமுத்தூர் சந்திப்பு வழியாக மகாராணி அவென்யூ, சின்மயா வித்யாலயா கடந்து சென்று அஞ்சனூர் பிரிவில் வலது புறம் திரும்பி, கல்வீரம்பாளையம், மருதமலை சாலை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி பாரதியார் பல்கலைக் கழகம் வரை செல்லலாம். அதுவரை மட்டுமே பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து மலைமேல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் இருந்து திரும்பி வரக்கூடிய வாகனங்கள் மருதமலை சாலை, கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூர் பிரிவு, வடவள்ளி ரவுண்டானாவில் இருந்து இடதுபுறம் திரும்பி இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவும், வடவள்ளி தொண்டாமுத்தூர் சந்திப்பு வந்து தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி வழியாகவும் மாநகருக்குள் செல்ல வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.