ரம்ஜான் பண்டிகை; திருப்பரங்குன்றம் மலையில் சிறப்பு தொழுகை

By KU BUREAU

மதுரை: ரம்ஜானையொட்டி திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலையில் 300 அடிக்கு மேல் இருக்கும் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி, நேற்று ரம்ஜானையொட்டி நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகி ஆரிப் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் நெல்லித்தோப்பு பகுதிக்குச் சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

மத நல்லிணக்கம் நிலவ வேண்டும், மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். முன்னதாக தொழுகைக்கு சென்றவர்களிடம் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்ததோடு, அடையாள அட்டையை ஆய்வு செய்த பின்னரே மலைக்குச் செல்ல போலீஸார் அனுமதித்தனர். மலையடிவாரப் பகுதி, மலைக்குச் செல்லும் பாதை மற்றும் நெல்லித்தோப்பு பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE