பழநியில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்.5-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

By KU BUREAU

பழநி: பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறுகிறது.

மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திரு ஆவினன் குடி கோயிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி, தங்கக் குதிரை வாகனம், தங்கமயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார்.

விழாவின் ஆறாம் நாளான ஏப்ரல் 10-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் வள்ளிநாயகியம்மன் திருமுருகன் திருக்காட்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அன்று இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சந்நிதி வீதி, கிரி வீதிகளில் சுவாமி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, 7-ம் நாளான ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டு, கிரி வீதிகளில் வலம் வருகிறது. விழாவின் நிறைவாக, ஏப்ரல் 14-ம் தேதி இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

பங்குனி உத்திரம் தொடங்க உள்ளதை அடுத்து, பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுக்க தயாராகி வருகின்றனர். கொடுமுடி சென்று ஆற்றில் தீர்த்தக் காவடி எடுத்து பழநி வந்து பக்தர்கள் வழிபடுவர். பன்னீர் காவடி, பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வழிபடுவது பங்குனி உத்திரத் திருவிழாவின் சிறப்பாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE