வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் பாடைக் காவடி திருவிழா: பக்தர்கள் கோலாகலம்

By KU BUREAU

திருவாரூர்: வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் பாடைக் காவடி திருவிழா நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி 2-வது ஞாயிற்றுக் கிழமை பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மகா மாரியம்மனை வேண்டிக்கொண்டு குணமடைந்ததும் இக்கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடனாக பாடைக் காவடி எடுப்பர். பச்சை மூங்கில் மற்றும் தென்னங்கீற்றால் ஆன பாடையில் நோயில் இருந்து குணமடைந்தவரை படுக்கவைத்து, உயிரிழந்தவருக்கு செய்யும் அனைத்து இறுதிச் சடங்குகளும் செய்யப்படும்.

பின்னர், அந்த பாடைக் காவடியை அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பகுதியில் இருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக்கொண்டுவந்து, நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் மகா மாரியம்மன் கோயிலை 3 முறை வலம் வருவார்கள். அப்போது, நோயுற்றவர்கள் அம்மனிடம் மறு உயிர் வாங்கியதாக நம்பிக்கை. அதன்படி, நிகழாண்டுக்கான பாடைக் காவடி திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம், பாடைக் காவடி, பால் காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், எஸ்.பி. கருண் கரட் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE