தோடா்களின் கோயில் கூரை வேயும் பாரம்பாிய திருவிழா: உதகையில் கோலாகலம்

By KU BUREAU

உதகை: கார்டன்மந்து பகுதியில் தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பாிய கோயில் கூரை வேயும் திருவிழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், குறும்பர், கோத்தா், காட்டு நாயக்கர், இருளர், பனியா் ஆகிய 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடிக்கின்றனர். தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர்.

தோடர் பழங்குடியின மக்களின் தலைமை மந்தாக முத்தநாடு மந்து உள்ளது. தோடர் இன மக்கள் தங்கள் வசிக்கும் கிராமமான மந்தில் கோவில் அமைத்து வழிபாடு செய்வார்கள். உதகை தாவரவியல் பூங்கா மேல்பகுதியில் உள்ள மஞ்சகல் மந்து எனப்படும் கார்டன்மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் நார்ஸ் கோயில் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அவ்வப்போது கூரை மட்டும் மாற்றப்பட்டு வந்த நிலையில், கோயிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது‌.

கடந்த ஒரு மாத காலமாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியான கோயிலின் கூரை வேயும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்து கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சிபோல, கூரை வேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

இதற்காக கோரக்குந்தா, அப்பா்பவானி உள்ளிட்ட வனங்களில் கிடைக்கக்கூடிய மூங்கில், பிரம்பு, அவில் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு, தோடர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து வழக்கமான உற்சாகத்துடன் கூரை வேய்ந்தனர்.

தொடா்ந்து அவா்களின் பாரம்பாிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கோயில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒரு மாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE