கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் திரண்ட உற்சவ மூர்த்திகள்: ஸ்கூட்டியில் வந்த விநாயகர்

By கோ.கார்த்திக்

கல்பாக்கம்: சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசிமகத்தையொட்டி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோயில்களில் அம்மன் மற்றும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, கடலில் நீராடும் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதில், ஸ்கூட்டியில் தின்பண்ட பொருட்கள் மூலம் அலங்காரத்துடன் வந்த விநாயகர் பக்தர்களை கவர்ந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசிமகம் உற்சவமாக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்வேறு கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள்வர். மேலும், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

இந்நிலையில், மாசிமகத்தையொட்டி 26-ம் ஆண்டு தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. இதில், சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள், ஆதிகேசவ பெருமாள், நகரியப்பகுதியில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், சதுரங்கப்பட்டினம் மீனவ பகுதியில் உள்ள பெரியபாளையத்தம்மன், ஊத்துகாட்டாம்மன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் பல்வேறு மலர் அலங்காரத்துடன் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் ஸ்ரீ அஸ்தராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அஸ்தராஜர் கடலில் இறங்கி நீராடினார். அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு கடலில் இறங்கி புனித நீராடினர். மேலும், கடற்கரைக்கு ஸ்கூட்டியில் அமர்ந்த நிலையில் பல்வேறு தின்பண்ட பாக்கெட்டுகள் அலங்காரத்துடன் எழுந்தருளி விநாயகர் பக்தர்களை பெரிதும் கவர்ந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதுரங்கப்பட்டினம் மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE