கோவை: கோனியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி கோவை மாநகரில் நாளை (மார்ச்.5) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை கோனியம்மன் கோயிலில், நடப்பாண்டுக்கான தேரோட்டத் திருவிழா, கடந்த மாதம் 18-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருக்கல்யாணம் நிகழ்வு இன்று (மார்ச்.4) நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மார்ச்.5) நடக்கிறது. இதையொட்டி கோவை மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோனியம்மன் கோயில் தேரோட்டம், நாளை மதியம் 2 மணிக்கு ராஜவீதி தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு, பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் தனது நிலையை அடையும். அனுமதிக்கப்பட்டவர்களை தாண்டி, வேறு யாரும் தேரினை நெருங்கக்கூடாது. தேர்செல்லும் பாதையில் பட்டாசு, வெடிகள், வெடிபொருட்கள் பயன்படுத்தவோ, வெடிக்கவோ கூடாது. தேரோட்டத்தையொட்டி, நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, உக்கடம், பேரூர் சாலை, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலீவன் வீதி பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பேரூரிலிருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது. மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி அருகில் வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா, பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் செல்லலாம். வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் புறவழிச்சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடைந்து செல்லலாம்.
» மதுரை காமராஜ் பல்கலை. பிஎச்டி மாணவர் சேர்க்கை முறைகேட்டை விசாரிக்க கோரி வழக்கு
» ஒரே படத்துக்காக ஒருவருக்கே 4 ஆஸ்கர் விருதுகள் - சீன் பேக்கர் சாதனை!
மருதமலை சாலை, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது. மாற்றாக, மருதமலை சாலை, தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.
உக்கடத்திலிருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் சாலை, மருதமலை சாலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூர் புறவழிச்சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம், ஏ.கே.எஸ் நகர் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம். சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகிகுமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.
கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது. தேர்த்திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.
வாகனம் நிறுத்தம் : கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ராஜவீதி, மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் கோனியம்மன் கோயில் எதிரேயுள்ள கார் பார்க்கிங், உக்கடம் காவல் நிலையத்துக்கு எதிரே மேம்பாலத்துக்கு கீழேயுள்ள காலியிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : தேரோட்டத்தையொட்டி நாளை மதியம் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புகிணறு சந்து, ராமர் கோயில் வீதி, மீன் மார்க்கெட், சிலம்போர்டு, அங்காளம்மன் வீதி, பட்டயகார அய்யா வீதி, உக்கடம் புறவழிச்சாலையின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.