சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் 9 கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழக முதல்வரின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு 365 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் நபர்களுக்கு காலை உணவு வழங்கும் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டம் திமுக சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், துறைமுகம் கிழக்கு பகுதி மண்ணடி, செம்பு தாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மகா சிவராத்திரிக்கு முதலில் வடிவம் கொடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. அந்தவகையில், அறநிலையத்துறை சார்பில் முதன் முதலில் மயிலாப்பூரில் மகா சிவராத்திரி விழா தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், கோவை பட்டீஸ்வரசுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் கோயில் என 5 கோயில்களில் கொண்டாடப்பட்டது.
கடந்த ஆண்டு, ஸ்ரீரங்கம் ஜெம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களும் சேர்க்கப்பட்டு, 7 கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்தாண்டு, திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், திருத்தணி வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் என படிப்படியாக தற்போது 9 கோயில்களில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
மகா சிவராத்திரி விழாவன்று கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து தரப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.