பழநி தைப்பூசத் திருவிழா: வள்ளிக்கு பிறந்த வீட்டு சீதனம் கொண்டு வந்த குறவர் இன மக்கள்! 

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்து முடிந்த நிலையில் வள்ளிக்கு தாய்வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று (பிப்.22) சனிக்கிழமை நடைபெற்றது.

முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத்திருவிழா கடந்த பிப்.5-ம் தேதி தொடங்கி, பிப்.14-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ம் நாள் திருவிழாவில் வள்ளி, தெய்வானை மற்றும் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையடுத்து, சனிக்கிழமை காலை வள்ளிக்குப் பிறந்த வீட்டு சீதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பழநியில் ஒன்று கூடினர். ஆதிவாசி, வள்ளி, தெய்வானை, முருகன் வேடமிட்டு, மேள தாளங்கள் முழுங்க ஆட்டம் பாட்டத்துடன் சீதனம் கொண்டு வந்தனர்.

தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பழ வகைகள், கிழங்குகள், வில் அம்பு, வேல் உள்ளிட்ட சீதனங்களை ஊர்வலமாக எடுத்து மலைக்கோயில் செல்லும் வழியில் உள்ள வள்ளி சுனையில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து விட்டு தாங்கள் கொண்டு வந்த சீதனங்களை கோயில் நிர்வாகத்திடம் கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE