பழநி: எடப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக்குழு சார்பில், பழநி மலைக்கோயிலில் 365-ம் ஆண்டாக பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டுச் சென்றனர்.
இந்நிலையில், தைப்பூசத் திருவிழா முடிந்தும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை குறையவில்லை. அவ்வாறு வரும் பக்தர்களில் பழநி மலைக்கோயிலில் ஒருநாள் இரவு தங்கி வழிபட்டுச் செல்லும் பாரம்பரிய உரிமையை பெற்றவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுல திருவிழாக் குழுவினர்தான்.
365 ஆண்டு பாரம்பரியம்
» ராமேசுவரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது மகா சிவராத்திரி விழா!
» கொடைக்கானல்; பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட விழா- கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தைப்பூசத் திருவிழாவையொட்டி, 365-வது ஆண்டாக எடப்பாடியில் இருந்து காவடி சுமந்தபடி பாதயாத்திரையாக புறப்பட்ட இச்சமூகத்தினர், நேற்று மாலை முதல் பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இன்று (பிப்.19) இரவு பழநி மலைக்கோயிலில் தங்கி, பல்வேறு வழிபாடுகளை நடத்துவர். இக்குழுவில் வரும் பக்தர்களுக்கு வழங்க டன் கணக்கில் பஞ்சாமிர்தத்தை அவர்களே தயார் செய்கின்றனர். அதற்காக, எடப்பாடியைச் சேர்ந்த பஞ்சாமிர்த தயாரிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் பழநி மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டன் கணக்கில் பஞ்சாமிர்தம்
10 டன் மலை வாழைப்பழம், 9 டன் நாட்டுச் சர்க்கரை, 1,200 கிலோ பேரீச்சம் பழம், 1,000 கிலோ கற்கண்டு, 1,000 லிட்டர் நெய், 50 கிலோ ஏலக்காய், 400 லிட்டர் தேன் ஆகியவற்றை பயன்படுத்தி, 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதில் ஒரு பகுதியை தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு டப்பாவில் நிரப்பி வழங்க உள்ளனர். மேலும், இன்று இரவு மலைக்கோயிலில் தங்கி பூ கோலமிட்டும், படிபூஜை நடத்தியும் வழிபடுகின்றனர்.