ரூ.45 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குள தெப்பத்தில் கழிவுநீர்: பக்தர்கள் வேதனை

By KU BUREAU

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சர்க்கரை குளம் தெப்பம் நகராட்சி சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட நிலையில், குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சக்கரை குளம் தெப்பத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி இருந்ததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. இதையடுத்து மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் (2022 - 2023) கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் தெப்பக்குளத்தை மேம்படுத்த நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. தெப்பத்தில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பின் சேதமடைந்த சுற்றுச்சுவருக்கு பதில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் தெப்பக்குளம் திறக்கப்பட்டது.

ஆனால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் மற்றும் குப்பை தெப்பத்துக்குள் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் அருகே வசிக்கும் பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தாய் சேய் நல விடுதி, அம்மா உணவகம் ஆகியவற்றுக்கு வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் தெப்பக்குளத்தை தூய்மை படுத்த வேண்டும் என பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தெப்பத்தை தூர்வாரிய நிலையில் மீண்டும் குப்பை, கழிவுநீர் தேங்கி புனிதமான தெப்பக்குளம் கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் நிலவுகிறது. தெப்பத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பழங்கால கற்கள் மாயம்

சர்க்கரை குளம் தெப்பத்தை தூர்வாரியபோது சேதமடைந்த சுற்றுச்சுவருக்குப் பதில், கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே அங்கிருந்த பழமையான கற்கள் என்ன ஆனது என தெரியவில்லை. மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பத்தின் பழங்கால கற்கள் என்ன ஆனது என்பது குறித்து தொல்லியல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE