பழநியில் தைப்பூச விழா கோலாகலம்: லட்சக்கணக்கான முருக பக்தர்கள் வழிபட்டு பரவசம்!

By KU BUREAU

பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநியில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று (பிப்.10) இரவு நடைபெற்றது. இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) தைப்பூசத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு நள்ளிரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். லட்சக்ணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்ததால் கிரிவீதி, சந்நதி வீதிகள் உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகளில் ஆடி வந்தனர். பலர் அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மலைக்கோயிலுக்கு செல்ல யானைப்பாதை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது. மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பகுதி பகுதியாக பக்தர்களை மலைக்கு செல்ல போலீஸார் அனுமதித்தனர். விரைவு தரிசன கட்டண சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். சண்முகநதி,

இடும்பன் குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் தொலைந்து போகும் குழந்தைகளை அடையாளம் காண, பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு ‘க்யூஆர் கோட்’ அடங்கிய கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. இதற்காக, பழநி அடிவாரம், பேருந்து நிலையம் உட்பட 3 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
வழிநெடுகிலும் பல இடங்களில் பக்தர்களுக்கு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் தரமான பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE