பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10-ம் தேதி திருக்கல்யாணம், 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. கொடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். சுவாமி, கொடிமரம் மற்றும் கொடி ஆகியவற்றுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, வேல், மயில், சேவல் இடம் பெற்ற மஞ்சள் நிறக் கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க, வெள்ளி மயில், தந்தப் பல்லக்கு, ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் 6-ம் நாளான வரும் 10-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 11-ம் தேதி தைப்பூசத்தன்று மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 14-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
» ஆவடி: காவல் ஆணையர் முன்பு பெண் தற்கொலை முயற்சி!
» ஸ்ரீவில்லி. அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி மாணவர்கள் மறியல்
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், க.தனசேகர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.