கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான தங்கச் சிலையை, கேரள பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற காணிக்கை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிப்பிள்ளை(61), ரூ. 6 கோடி மதிப்பில், 6 கிலோ 800 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட தேவி குமாரி (பகவதி அம்மன்) சிலையை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதை, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அறநிலையத் துறை இணை ஆணையர் ஜான்சிராணி, கோயில் மேலாளர் ஆனந்த் உடனிருந்தனர்.
பின்னர், அம்மன் சிலை மூலஸ்தான கருவறை வாயிலில் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொலு மண்டபம் கொண்டுவரப்பட்டு, சிலையின் எடை மற்றும் அளவுகள் சரிபார்த்து, பதிவு செய்யப்பட்டது.
» ஓடும் ரயிலில் மாலுமியிடம் செல்போன் பறிப்பு: சென்னையில் 2 பேர் கைது
» கடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த ஈரோட்டை சேர்ந்த கும்பல் கைது
பகவதியம்மன் கோயிலில் தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் அம்மன் சிலைக்கு பூஜை செய்து, கோயிலைச் சுற்றி வலம் வரும் வைபவம் நடைபெற்று வருகிறது. இதற்கு வெள்ளியிலான அம்மன் சிலை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது தினசரி மூன்று வேளை பூஜைக்காக அம்மன் தங்கச் சிலையை தொழிலதிபர் ரவிப்பிள்ளை காணிக்கையாக வழங்கியுள்ளார். சிலையை வைப்பதற்காக 3 கிலோ எடையில் ஆமை உருவம் கொண்ட வெள்ளி பீடத்தையும் அவர் வழங்கினார்.
“கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தங்க அம்மன் சிலையை வழங்கிய நேர்த்திக் கடனால், எனது வாழ்நாள் லட்சியம் நிறைவேறி, பெரும் புண்ணியம் பெற்றதாக உணர்கிறேன். இந்தச் சிலையை கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்த கைலாஷ் குழுவினர் வடிவமைத்தனர்” என்று ரவிப்பிள்ளை தெரிவித்தார்.