பழநியில் தைப்பூசத் தேர் வெள்ளோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் ரூ.49 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட தைப் பூசத் தேர் வெள்ளோட்டம் இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உபகோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்நிலையில் மரத்தேரில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.49 லட்சத்தில் தேரை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணி தலைமையில் 5-க்கும் மேற்பட்டோர் தேர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இலுப்பை மரத்தில் தேரின் சக்கரம் முதல் சுவாமி பீடம் வரையிலான பாகங்கள் செய்யப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் திங்கள்கிழமை (ஜன.27) காலை தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

முன்னதாக, நேற்று மாலை முதல் கால வேள்வி நடந்தது. இன்று (ஜன.27) காலை 2ம் கால வேள்வி முடிந்து, தேருக்கு நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி, சார் ஆட்சியர் கிஷன் குமார், எஸ்பி பிரதீப், எம்.பி. சச்சிதானந்தம், அறநிலையத் துறை கூடுதல் செயலாளர் சுகுமார், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE