கோவை: கோவை காமாட்சிபுரி ஆதீனத்தில் குண்டம் திருவிழா வரும் ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது என காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கோவையில் இன்று (ஜன.20) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''காமாட்சிபுரி ஆதீன ஆதி குரு முதல்வர் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் நல்லாசியுடன், ஆதீனத்தில் சமூக, சமய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சக்தி வழிபாட்டினை முழு முதல் கடவுளாகக் கொண்டு கடந்த அரை நூற்றாண்டு காலமாக உலகம் முழுவதும் ஆன்மீகப் பணியினை காமாட்சிபுரி ஆதீனம் செய்து வருகிறது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் மகாசக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்னையின் 44-ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் பெரும் திருவிழா வரும் 22-ம் தேதி காலை விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, கோமாதா பூஜை ஆகியவைகளுடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் மூன்று நேரமும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற உள்ளன. வரும் 25-ம் மாலை மகாலட்சுமி வேள்வி, 2-ம் குரு மகா சன்னிதானம் அழைப்பு, அம்மன் அழைப்பு, ஆகிய நிகழ்வுகளுடன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
26-ம் தேதி குடியரசு நாளன்று ஆதீனத்தில் காலையில் தேசிய கொடி ஏற்றுதல், தொடர்ந்து சர்வோதய சங்க வளாகத்தில் இருந்து கரகங்கள் வருதலும் நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் குண்டம் இறங்குதல், இரவு இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து 28-ம் தேதி வசந்த விழா நடைபெறுகிறது.
» திருச்செந்தூரில் 6 மணிநேரம் பக்தர்கள் அடைத்துவைப்பு; சேகர்பாபு அலட்சிய பதில் - அண்ணாமலை கண்டனம்
» திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழிகள் பலியிட தடை: இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்!
இவ்விழாவில், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிங்கப்பூர், மலேசியா நாட்டின் ஆதீன சீடர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.'' இவ்வாறு அவர் கூறினார்.
இச்சந்திப்பின் போது, ஆதீன அவைத் தலைவர் இ.க. சிதம்பரம், ஆதீன செய்தித் தொடர்பாளர் ஆ.வெ.மாணிக்கவாசகம், காங்கிரஸ் நிர்வாகி இருகூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.