திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழிகள் பலியிட தடை: இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்!

By KU BUREAU

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட போலீஸார் தடை விதித்தனர். இவர்கள் மலைமீது செல்லாதவாறு மலையடிவாரத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவின் சந்தனகூடு வைபவம் ஜன.17-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதனையொட்டி ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கிராம மக்கள், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மலை மீதுள்ள பள்ளிவாசலுக்கு கந்தூரி கொடுக்க ஆட்டுடன் ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்பினர் மலை மீது செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மலைமேல் உயிர்ப்பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினார். இதன்பின்னர் அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின்பு இஸ்லாமிய்கள கலைந்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து மலைக்கு மேல் செல்பவர்களை கண்காணிக்க 600-க்கும் மேற்பட்ட போலீஸார் மலைக்கு செல்லும் பாதை, பெரிய ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், தர்கா பள்ளிவாசலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமே சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE