சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

By KU BUREAU

சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பூலோக கைலாயம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனம், 6-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனம், 7-ம் தேதி வெள்ளி பூத வாகனம், 8-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 9-ம் தேதி வெள்ளி யானை வாகனம், 10-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் தங்க ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக்குதிரையில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 5 மணியளவில் தேவாரம், திருவாசகம் பாடிட, வேத மந்திரங்கள் முழங்க, நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'சிவ சிவா' என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி வழியாக நடைபெற்ற தேரோட்டம், இரவு 7 மணியளவில் நிலையை அடைந்தது. மேலவீதி, வடக்கு வீதி சந்திக்கும் பகுதியில், பருவதராஜ குருகுல மரபினர் நடராஜர், சிவாகசுந்தரி அம்பாளுக்கு பட்டு சாற்றி வழிபட்டனர். இரவு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு லட்சார்ச்சனை நடைபெறது.

இன்று அதிகாலை நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா, பிற்பகலில் ஆருத்ரா தரிசனம், ஞானாகாச சித்சபை பிரவேசம், நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் 15-ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தர தாண்டவ தீட்சிதர் மற்றும் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இதையொட்டி, கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE