பழநி: பழநியில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு , அதன் வழியாக கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.
இதேபோல், பழநி அருகே உள்ள பால சமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக வந்து பெருமாள் காட்சி அளித்தார். கோயில் உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.