மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

By KU BUREAU

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. ஐயப்பன் கோயிலில் கடந்த 26-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக இன்று (டிச. 30) மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.

தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்ற உள்ளார். பின்னர் பூஜைகள் எதுவுமின்றி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கும். மீண்டும் நடை திறக்கப்பட உள்ளதையொட்டி சந்நிதானம் உட்பட கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றன. மேலும், சத்திரம், அழுதகடவு, முக்குழி வனப் பாதைகளில் பக்தர்களை காலை 7 மணி முதல் அனுமதிக்கப்பட உளளனர்.

மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளதால் ஏராளமான பக்தர்கள் நேற்று பிற்பகலில் இருந்தே பம்பை மற்றம் வனப் பாதைகளின் நுழைவுப் பகுதிக்கு வந்து, காத்திருக்கத் தொடங்கி உள்ளனர். முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை வரும் ஜன. 14-ம் தேதி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE