மதுரையில் களைகட்டும் சபரிமலை சீசன்; களைத்து போகும் ஐயப்ப பக்தர்கள்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சபரிமலை சீசனால் ஐய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் மதுரை எல்லீஸ் நகர் மீனாட்சியம்மன் கோயில் வாகன நிறுத்துமிடம் ‘ஹவுஸ் ஃபுல்’ ஆனது. இதனால் பேருந்துகள், வேன்கள், கார்களை நிறுத்த இடமில்லாமல் பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையில் நிறுத்துகின்றனர். அங்கிருந்து கோயிலுக்கு வருவதற்கு பல கி.மீ., நடந்தும், ஆட்டோக்கள், பஸ்களில் நெரிசலிலும், இடிபாடுகளிலும் சிக்கி ஐய்யப் பக்தர்கள், அன்றாடம் பெரும் சிரமம் அடைகிறார்கள்.

சபரிமலை சீசன் நவம்பரில் தொடங்கி, ஜனவரி 20ம் தேதி வரை காணப்படும். இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கியதால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து மதுரை வழியாக சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். மதுரையில் அவர்கள், மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், அழகர் கோயில் போன்ற புன்னிய ஸ்தலங்களுக்கு வருகிறார்கள்.

அதனால், ஆஃப் சீசனான தற்போதும் மதுரை முக்கிய சுற்றுலா ஸ்தலங்களான மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் கோயில்கள் திருவிழா போல் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் களைகட்டியுள்ளது. ஆனால், அழகர் கோயிலை தவிர, திருப்பரங்குன்றம், மீனாட்சியம்மன் கோயில்களில் ஐயப்ப பக்தர்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான ‘பார்க்கிங்’ வசதியில்லை. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள மாநகராட்சி ‘கார் பார்க்கிங்’ ஒரே நேரத்தில் 120 கார்கள், 1,400 இரு சக்கர வாகனங்களை மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளன.

அதனால், அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த கார் பார்க்கிங் ‘ஹவுஸ் புல்’ ஆகிவிடுகிறது. அதனால், இந்த ‘பார்க்கிங்’கில் நிறுத்த வரும் ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்களை போலீஸார் திருப்பிவிடுகின்றனர். ஏற்கெனவே, பல கி.மீ., நகரச்சாலைகளில் ஊர்ந்து வந்த அவர்கள், வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெரும்பாலும் வெளிமாநில ஐய்யப்ப பக்தர்கள், கார், ஆம்னி பஸ்கள், வேன்களில் வருகிறார்கள். பேருந்து, வேன்களை வடக்கு ஆவணி மூல வீதி கார் பார்க்கிங்கில் நிறுத்த முடியாது. இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு இந்து அறநிலையத்துறை சார்பில், எல்லீஸ் நகரில் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

பேருந்துகளை நிறுத்துவதற்கு 12 மணி நேரத்திற்கு ரூ.200, வேனுக்கு ரூ.70, காருக்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இந்த வாகன நிறுத்துமிடமும், ஒரு மணி நேரத்தில் ‘ஹவுஸ் புல்’ ஆகிவிடுகிறது. அதனால், மீனாட்சிம்மன் கோயில் வரும் ஐய்யப்ப பக்தர்கள், தற்காலிகமாக தற்போது பை-பாஸ் ரோட்டில் சர்வீஸ் சாலையில் நிறுத்துகிறார்கள். இந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் மாநகர போக்குவரத்து போலீஸாரின் கருணையால் ஐய்யப்ப பக்தர்களுடைய வாகனங்கள் இந்த சர்வீஸ் சாலையில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படகிறது.

கடந்த காலத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே காம்பளக்ஸ் பேருந்துநிலையத்தில் சபரிமலை சீசன் நேரத்தில் ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு, போதுமான இடவசதி இருந்தது. அதுபோல், மீனாட்சிம்மன் கோயில் அருகே ஜான்சிராணி பூங்காவில் இருந்த கார் பார்க்கிங் இருந்தது. தற்போது இந்த பார்க்கிங் இடங்களில் மாநகராட்சி கடைகள் கட்டி வாடகைக்குவிட்டுள்ளது. அதனால், சபரிமலை சீசன் நேரமான தற்போது ஐய்யப்பக்தர்கள், பார்க்கிங் செய்வதற்கு இடமில்லாமல் பஸ், கார்கள், பேருந்தகளில் நகர் வலம் வருகிறார்கள்.

இதுகுறித்து ஐய்யப்ப பக்தர்கள் கூறுகையில், ‘‘பேருந்துகளில் பல நூறு கி.மீ., தாண்டி மீனாட்சியம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்ய வருகிறோம். எங்களுடன் பெண்கள், சிறு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வருகிறார்கள். ஆனால், பேருந்துகளை உரிய இடங்களில் நிறுத்த இடமில்லாமல் அவர்களை காலை கடன்களை செல்வதற்கு அழைத்து செல்ல முடியாலும், சரியான நேரத்தில் சாப்பிட வைக்கவும் முடியாமல் சிரமப்படுகிறோம். எல்லீஸ் நகரில் பேருந்துகளை நிறுத்தினால் மறுபடியும் இங்கிருந்து பல கி.மீ., பஸ்களில், ஆட்டோக்களில் இடிபாடுகளில் சிக்கி கோயிலுக்கு செல்ல வேண்டிய உள்ளது. கோயிலுக்கு அருகே கடந்த காலங்களில் பேருந்துகளையும், கார்களையும் பார்க்கிங் செய்தோம்.

வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கும், சாமி தரிசனத்திற்கும் தற்போது பல மணி நேரம் சிரமப்பட வேண்டிய உள்ளது. அதனால், ஒரு முறை வரும் ஐய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானவர்கள், அடுத்த முறை கோயில்கள் செல்லும் பட்டியலில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வர தயங்குகிறார்கள். பேருந்துகளை நிறுத்துவதற்கு 12 மணி நேரத்திற்கு ரூ.200 வசூலிக்கிறார்கள். ஆனால், இந்த எல்லீஸ் நகர் பார்க்கிங்கில் ஐய்யப்பக்தர்களுக்கும், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை, ’’ என்றனர்.

23ம் தேதிக்கு பிறகு அரையாண்டு விடுமுறை தொடங்கிவிடும். அதனால், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட மதுரை சுற்றுலாத்தலங்களுக்கு அதிகளவு வர வாய்ப்புள்ளது. ஐய்யப்ப பக்தர்கள் வருகையுடன் சுற்றுலாப்பயணிகள் கூட்டமும் சேரும்போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் கூட்டம் இன்னும் அதிகமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE