குமுளி: ஐயப்பனை தரிசனம் செய்ய வனப்பாதை வழியே பாதயாத் திரையாக வரும் பக்தர்கள் சந்நிதானத்தில் விரைவு தரிசனம் செய்வதற்கான சிறப்பு அனுமதி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பலரும் பம்பை வரை வாகனங்களில் வந்து பின்பு 7 கி.மீ.மலைப்பாதையில் சென்று சந்நிதானத்தை அடைகின்றனர்.
இருப்பினும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பலரும் பாரம்பரிய பாதை எனப்படும் எருமேலியில் இருந்து காட்டுப்பாதையில் பம்பை வரை செல்கின்றனர். இதில் சுமார் 30 கி.மீ.தூரம் ஏற்றம், இறக்கம், கடினமான பாதைகளை இவர்கள் கடந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு செல்லும் பக்தர்கள் சந்நிதானத்தில் மீண்டும் நீண்ட வரிசையில் பல மணிநேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆகவே சிறப்பு வரிசையில் அனுமதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் இத்திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்படி எருமேலியில் இருந்து வரும் பக்தர்களுக்கு முக்குழியில் நுழைவுச்சீட்டு முத்திரையிட்டு வழங்கப்படும்.
வரும் வழியான புதுக்குறிச்சி தாவளை, செரியானவட்டம் ஆகிய இடங்களிலும் முத்திரை குத்தப்படும். இந்த சிறப்பு நுழைவுச்சீட்டின் மூலம் மரக்கூட்டம் வழியே வரும் பக்தர்கள் சிறப்பு பாதையில் சென்று தரிசிக்கலாம். வனத்துறை மூலம் இதற்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது.
» எங்கும் கொலை; எதிலும் கொலை இதுதான் திமுக ஆட்சியின் அவல நிலை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
» ‘சூப்பர் ஸ்டார்’, ‘தளபதி’ என ரசிகர்கள் கோஷம் - பதறிப்போன நடிகர் சூரி!
முக்குழியில் நடந்த தொடக்க விழாவில் சபரிமலை கூடுதல் மாவட்ட நீதிபதி அருண் எஸ்.நாயர் பக்தர்களுக்கு இந்த சிறப்பு அனுமதிச் சீட்டை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பம்பை வனச்சரக அலுவலர் முகேஷ், முக்குழி துணை வனச்சரக அலுவலர் ஜெயபிர காஷ் உள்ளிட்ட பலரும் உட னிருந்தனர். அனுமதிச்சீட்டு பெற்று சந்நிதானம் வந்த முதல் குழுவை காவல்துறை சிறப்பு அதிகாரி, பி.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.