திருவண்ணாமலை: 4,560 அடி உயரத்தில் சுவாமியை வழிபட பருவதமலை மீது ஏற கட்டணம் வசூல்!

By KU BUREAU

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே பருவதமலையின் இயற்கையைப் பாதுகாக்க, சூழல் கட்டணம் என்ற பெயரில், மலையேறும் பக்தர்களிடம் வனத் துறையினர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே தென்மகாதேவ மங்கலம் எனும் கிராமத்தில் 4,560 அடி உயரம் கொண்டது பருவதமலை. 5,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

சித்தர்களின் புகழ்பெற்ற, தென் கயிலாயம் என அழைக்கப்படும் மிகப் பழமையான மலையாகும். மூலிகை மரங்கள் நிறைந்துள்ளன. மலைகளின் அரசன், நவிர மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. 3-ம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது. மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை யடிவாரத்தில் வீரபத்திரர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பக்தர்கள் மலை யேறுகின்றனர்.

இத்தகைய பழமையான பருவத மலைக்கு கார்த்திகை தீபம், பிர தோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை உள்ளது. மலைக்குச் செல்ல செங்குத்தான பாதை உள்ளது. பருவதமலை மீது ஏறிச் செல்வது எளிதல்ல என்றாலும், பக்தி மிகுதியால் சிவ பக்தர்களின் யாத்திரை தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள், மலை மீது ஏறிச் சென்று சுவாமியைத் தரி சிக்கின்றனர். இவர்களில், சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து வரும் பக் தர்களை அதிகம் காண முடிகிறது. மேலும், 24 கி.மீ., சுற்றளவு கொண்ட பருவதமலையை பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாகும். இதில், தனுர் மாதம் (மார்கழி முதல் தேதி - இன்று 16-ம் தேதி) பிறக்கும் நாளில் திரளான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.

இந்நிலையில் பருவதமலை ஏறுவதற்குத் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை, கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. புதுப் பாளையம் வனச்சரகம் சார்பில் சூழல் கட்டணம் என்ற பெயரில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கட்டணம் கிடையாது. மேலும் பருவத மலையைச் சுற்றி உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான் பிள்ளைபெற்றாள், அருணகிரி மங்கலம், கோயில் மாதிமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் வசிப் பவர்களுக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ரசீது.

பருவதமலையை ஏற வரும்போது, அரசாங்கத்தின் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வனத்துறையினர் கட் டணம் நிர்ணயம் செய்துள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பருவதமலைக்கு பவுர்ணமி நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.

வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். மலையேறும் பக்தர்களுக்கு, மலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளை வீசிவிட்டுச் செல்கின்றனர். இவற்றை, மலையிலிருந்து அகற்ற வில்லை என்றால், மலையின் இயற்கை தன்மை பாதித்துவிடும். இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்யவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றவே, குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மகா தீபத் திருநாளிலிருந்து கட்டணம் வசூ லிக்கப்படுகிறது” என்றார்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “சதுரகிரி மலைக்குக் கட்டணம் வசூல் செய்வதுபோல், பருவதமலைக்கும் வனத்துறையினர் கட்டணம் வசூல் செய்கின்றனர். குப்பையை சேகரிக்க, தொட்டிகளை வைக்கலாம். மேலும், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. எருமேலி, காலக்கட்டி, அமுதமலை, கரிமலை என பெருவழியாகச் சபரிமலைக்கு யாத்திரை செல்லும்போது, பிளாஸ்டிக் கொண்டு செல்ல பக்தர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

மலைகளின் நுழைவு பகுதியில், பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை (குடிநீர் பாட்டில்) வனத்துறையினர் பறிமுதல் செய்து விடுகின்றனர். கட்டணம் வசூலிப்பது கிடையாது. இதேபோல் கட்டுப்பாடுகளைத் தமிழக வனத்துறை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு வனத்துறைக்கு உதவிட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைக் கைவிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE