திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து மூலவர் சந்நிதி முன்புள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வந்தனர். கடந்த 10-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் பவனி வந்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கடந்த 13-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயில் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள பருவத மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டன. 11 நாட்களுக்கு (டிச. 23 வரை) மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம். ஜோதி பிழம்பாகக் காட்சி கொடுத்த அண்ணாமலையாரைக் குளிர்விக்கும் வகையில், திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாள் தெப்ப உற்சவம் ஆரம்பமானது.
» ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் கருத்து
» புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா விநியோகம்: சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்
முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரரும், நேற்று இரவு பராசக்தி அம்மனின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இன்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில், மலையே மகேசன் எனப் போற்றி வணங்கி 14 கி.மீ. தொலைவு கொண்ட அண்ணாமலையை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் (பெரிய நாயகர்) நேற்று கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் பராசக்தி அம்மன் சென்றார்.
கிரிவலப் பாதையில் சென்ற சுவாமிக்கு வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்தும், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டும் வழிபட்டனர். தை மாதம் 2-ம் தேதி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா என ஆண்டுக்கு இருமுறை அண்ணாமலையார் கிரிவலம் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நாளை இரவு நிறைவடைகிறது.
கார்த்திகை தீபம், பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூன்றாவது நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், 4 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.