பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்!

By ஆ.நல்லசிவன்

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா டிச.7-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4.45 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மலைக்கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. வெளிப் பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மாலை 6 மணிக்கு மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று தங்கரதப் புறப்பாடு நடைபெறவில்லை. கார்த்திகை தீபத்தை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், மாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE