திருப்பரங்குனறம் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்!

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று கோயில் மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா டிச.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாளான இன்று மாலையில் மேளதாளங்கள் முழங்க 4 அடி உயரம் 2 அடி அகலமுடைய கொண்ட தாமிர கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து சுமார் 150 அடி உயர உச்சிப்பிள்ளையார் கோயில் வளாகத்திலுள்ள தீப மேடையில் தாமிர கொப்பரை வைக்கப்பட்டது.

இக்கொப்பரை 350 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணி திரி, 5 கிலோ கற்பூரம் நிரப்பப்பட்டது. மாலை 5.30 மணியளவில் கோயில், மலை மீது சிவாச்சாரிகள் பூஜைகள் செய்தனர். பின்னர் கோயிலுக்குள் பெரிய மணி அடித்ததும் மாலை 6 மணியளவில் கோயிலுக்குள் ‘பால தீபம்’ ஏற்றப்பட்டது. கோயில் மணியோசை கேட்டதும் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் கார்த்திகை விளக்கு, கந்தன் விளக்கு, கடம்பன் விளக்கு என கோஷங்கள் எழுப்பினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். மலையில் மகா தீபம் ஏற்றியதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றினர்.

இரவு 8 மணி அளவில் தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சன்னதி தெரு வழியாக 16 கால் மண்டபம் அருகே எழுந்தருளினார். அங்கு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. எரிந்த சொக்கப்பனையின் சாம்பலை வயலில் போடுவதற்காக விவசாயிகள் அள்ளிச் சென்றனர். 10-ம் நாளான நாளை (டிச.14) தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE