திருவண்ணாமலை: திருஅண்ணாமலையின் உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதியாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை அரோகரா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசித்தனர்.
திருவண்ணாமலையின் கார்த்திகைத் தீபத் திருவிழா டிசம்பர் 1ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கார்த்திகைத் தீபத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்நிதியில் அதிகாலையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலையின் உச்சியில் பருவதராஜ குல வம்சத்தினர் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். அப்போது ஜோதியாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை அரோகரா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தீபத்தை தரிசித்தனர்.
» அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம் - ரசிகர்கள் நிம்மதி!
» வாரிசு சான்றிதழுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் - திருப்பூரில் பெண் வருவாய் ஆய்வாளர் கைது
மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலின் நவ கோபுரங்கள் மற்றும் பல கட்டிடங்கள் மின்னொளியில் ஜோலித்தன. வாண வேடிக்கைகள் விண்ணில் பாய்ந்தது. கோயில், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சிக் கொடுத்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டன. மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.