திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா - பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

By KU BUREAU

திருவண்ணாமலை: மகா தீபத் திருவிழாவில் பக்தர்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும், கார் பார்க்கிங், தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்ல கூகுள்மேப் உதவிக்கான வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா நாளை (டிச. 13-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதை யொட்டி, தற்காலிக பேருந்து நிறுத்தங்கள், கார் பார்க்கிங் வசதி மற்றும் கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (டிச.12-ம் தேதி) காலை முதல் வரும் டிச.15-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசீர்வதித்தல் என்ற போர்வையில் பக்தர்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் வசூலித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். கோயில் கோபுரங்கள் முன்பாக, கிரிவலப்பாதையில் எங்கும் கற்பூரம் ஏற்றக்கூடாது.

கிரிவலப்பாதையில் கால்நடைகளை பக்தர்களுக்கு இடையூறாக உலாவ அதன் உரிமையாளர்கள் விடக்கூடாது. பக்தர்கள் காவல் துறை உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல் உதவி மையத்தை அணுகலாம். அல்லது நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் 04175-222303, உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 94981-00431, அவசர உதவி எண் 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 91596-16263 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள தற்காலிக கழிப்பிடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்களது காலணிகளை 4 கோபுரங்களுக்கு முன்பாகவோ அல்லது மாடவீதிகளில் விடுவதை தவிர்க்க வேண்டும்.

திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கார் பார்க்கிங், தற்காலிக பேருந்து நிலையங்கள் செல்வது தொடர்பாக 93636-22330 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hello’ என்று குறுஞ்செய்தி அனுப்பினால் கூகுள் மேப் வரப்பெறும். அந்த மேப்பின் உதவியுடன் கார் பார்க்கிங் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்லலாம்.

வாட்ஸ்அப் எண் மற்றும் அதன்
க்யூஆர் கோடு வெளியிடப்பட்டது.

116 கார் பார்க்கிங்: கார் பார்க்கிங் பகுதியில் மட்டுமே கார்களை நிறுத்த வேண்டும். சாலையோரங்களில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். வேலூர் சாலையில்- 13, அவலூர்பேட்டை சாலையில்- 3, திண்டிவனம் சாலையில் -17, வேட்டவலம் சாலையில்- 9, திருக்கோவிலூர் சாலையில்- 10, மணலூர்பேட்டை சாலையில்- 11, தண்டராம்பட்டு சாலையில்- 5, செங்கம் சாலையில் -10, காஞ்சி சாலையில்- 2 இடங்கள் மற்றும் திருவண்ணாமலை ரிங் ரோட்டில் வேலூர் சாலை தீபம் நகரில் தொடங்கி செங்கம் சாலை அய்யம்பாளையம் வரை- 27 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், திருவண்ணாமலை நகருக்குள் அண்ணாமலையார் கோயில், மத்திய பேருந்து நிலையம், காந்திநகர் உள்ளிட்ட 9 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் இலவச அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், வேலூர் சாலை வழியாக திருவண்ணாமலை வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் அண்ணா வளைவு பகுதி பேருந்து நிலையத்திலும், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள மூகாம்பிகை நகர் மற்றும் ஏ.கே.எஸ் நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.

அவலூர்பேட்டை சாலையில் செல்வபுரம் அழகேசன் ஆயில் மில், திண்டிவனம் சாலையில் மார்க்கெட் கமிட்டி வளாகம்,வேட்டவலம் சாலையில் ஏந்தல் சர்வேயர் நகர், திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம், மணலூர்பேட்டை மற்றும் தண்டராம்பட்டு சாலையில் வரும் பேருந்துகள் மணலூர்பேட்டை எஸ்.ஆர் ஸ்டீல் கம்பெனி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம், செங்கம் சாலையில் அத்தியந்தலில்-3 தற்காலிக பேருந்து நிலையங்கள், காஞ்சி சாலையில் ஆடையூர் டான் போஸ்கோ சிகரம் பள்ளியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE