ஜன.13-ல் திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா - ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

By KU BUREAU

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா ஜன.4-ல் காப்பு கட்டுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி ஜன.13-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் திருக்கோயில் உள்ளது. சிவன் கோயில்களில் முதன்முதலாக தோன்றியதாகவும், இக்கோயில் ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் விலை மதிக்கத்தக்க ஒற்றை பச்சை மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல் அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.

இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் விழா ஜன.4-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. ஜன.12-ல் காலை 8 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் காப்பு படி களைதல் தொடர்ந்து 32 வகையான அபிஷேகங்கள், மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பொதுமக்கள் தரிசனத்திற்கு பிறகு 13-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல், ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தொடர்ந்து அன்றைய தினம் பொதுமக்கள் தரிசனம் மற்றும் மாலையில் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தல், கூத்தர் பெருமான் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு இரவு நடை சாத்தப்படும்.

இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் ஜன.4 முதல் 11-ம் தேதி வரை ஆன்மிக நிகழ்ச்சிகளும், 12-ம் தேதி இரவு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை: ஜனவரி 13 திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, ஆட்சியர் சிமரன்ஜீத் சிங் காலோன் இன்று (டிச.11) அறிவித்துள்ளார். மேலும் ஜன.13-ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜன. 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE