ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி ரத ஊர்வலம்: டிச.22-ல் புறப்பாடு!

By என்.கணேஷ்ராஜ்

சபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு வரும் 26-ம் தேதி தங்க அங்கி ஆடை அணிவித்து மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஆபரணங்கள் திருத்தேர் மூலம் வரும் 22-ம் தேதி ஆரன்முலா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி மண்டல கால வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

வரும் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்நாளில் ஐயப்பனுக்கு 430 பவுனில் வடிவமைக்கப்பட்ட தங்க அங்கி, தங்க ஆடை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆடைகள் திருவிதாங்கூர் மன்னரால் ஐயப்பனுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையில் அணிவிப்பதற்காக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுவது வழக்கம்.

அலங்கரிக்கப்பட்ட ரதம் இந்த ஆண்டு விழாவுக்காக வரும் 22-ம் தேதி காலையில் புறப்பட உள்ளது. ஓமலூர், முருங்கமங்கலம், கோன்னி, பெருநாடு ஆகிய இடங்கள் வழியே இந்த ரதம் பம்பைக்கு 25-ம் தேதி பிற்பகலில் சென்றடையும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதத்தில் இருக்கும் இந்த பேழையை ஐயப்ப சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக சபரிமலைக்கு தூக்கிச் செல்வர்.

சரங்குத்தி எனும் இடத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் மேளதாளத்துடன் இதனை வரவேற்பர். பின்பு 18-ம் படி வழியே சந்நிதானத்துக்கு கொண்டு செல்லப்படும். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு மேல்சாந்திகள் அருண்குமார் நம்பூதரி, வாசுதேவன் நம்பூதரி. ஆகியோர் தங்க அங்கி பேழையைப் பெற்றுக்கொள்வர்.

தொடர்ந்து சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 26-ம் தேதி ஐயப்பனுக்கு இந்த ஆடைகள் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். தொடர்ந்து அன்றிரவு ஹரிவராசனம் பாடலுடன் இந்த ஆண்டு மண்டல காலத்துக்கான வழிபாடுகள் நிறைவடைந்து நடை சாத்தப்படும். தங்க ஆடைகளை கொண்டு வரும் அலங்கரிக்கப்பட்ட ரதத்துக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE