“நெல்லையப்பர் கோயில் யானை நலமே...” - வதந்திக்கு கோயில் நிர்வாகம் விளக்கம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி நல்ல உடல் நிலையுடன் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும், சமூக வலைதளங்களில் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘இத்திருக்கோயிலுக்கு சொந்தமான காந்திமதி (வயது 55) என்கிற பெண் யானை கடந்த 1985 -ம் ஆண்டு முதல் இத்திருக்கோயிலில் வைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக யானையின் பின் கால்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்ததால், திருநெல்வேலி கால்நடை பன்முக மருத்துவமனை மருத்துவர்கள், மாவட்ட வன அலுவலக மருத்துவர்கள் தொடர் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப் வாயிலாகவும் திருக்கோயில் யானையை கொட்டகைக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும், கஜபூஜைக்கு யானை கலந்து கொள்ள திருக்கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை எனவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் திருநெல்வேலி வளர்ப்பு யானைகள் கண்காணிப்பு குழுவினரும், யானை பராமரிப்பது குறித்து இத்திருக்கோயில் யானையை நேரில் மருத்துவ பரிசோதனை செய்து, யானையின் பின்னங்கால் மட்டும் சிறிது பாதிப்பாக உள்ளது; மற்றபடி யானை நல்ல நிலையில் உள்ளது எனவும், யானையினை பக்தர்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தினர்.

அதன் அடிப்படையில் பக்தர்களின் முன்பாக தினசரி கஜ பூஜையும் நடத்தி வரப்பட்ட நிலையில், யானை நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதால், திருநெல்வேலி கால்நடை பன்முக மருத்துவமனை மருத்துவர் யானையை பரிசோதனை செய்து, மாவட்ட வன அலுவலக மருத்துவர் நேரில் வந்து மருத்துவ பரிசோதனை செய்ய பரிந்துரை செய்தார். இதனையடுத்து திருநெல்வேலி கால்நடை பன்முக மருத்துவமனை மருத்துவர், மாவட்ட வன அலுவலக மருத்துவர் மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி வல்லுநர் குழு ஆகியோரால் பரிசோதனை செய்யப்பட்டு யானையின் ரத்தம், உமிழ்நீர் மற்றும் சாணம் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் யானைக்கு 10 நாட்கள் ஓய்வளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் தற்போது யானை கொட்டகைக்குள் வைத்து, கால்களை பலப்படுத்துவதற்காக பின்னங்கால்களில் பேண்டேஜ் சுற்றி பராமரிக்கப்பட்டு வருவதுடன், தினமும் காலை திருவனந்தல் பூஜையின் போது பக்தர்களின் முன்பாக முறைப்படி கஜ பூஜையும் நடைபெற்று வருகிறது.

மாவட்ட வன அலுவலக மருத்துவர் கடந்த 9-ம் தேதி அன்று யானையை பரிசோதனை செய்து யானையின் மருத்துவ சிகிச்சையில் போதிய முன்னேற்றம் உள்ளது எனவும், இன்னும் 10 நாட்களுக்கு யானைக்கு நடைபயிற்சி எதுவும் வழங்க வேண்டாம் எனவும் , யானையின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வரப்பெற்றதும் அதனடிப்படையில் தொடர் மருத்துவ சிகிச்சை வழங்கலாம் எனவும் தெரிவித்தார்.

தற்போது திருக்கோயில் யானை நல்ல நிலையில் உள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை அளித்து வரப்படுகிறது. சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் யானைக்கு உடல்நிலை சரியில்லை உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE